< நீதிமொழிகள் 10 >

1 சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான். 2 அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும். 3 யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்; துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். 4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 5 கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன். 6 நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 7 நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும். 8 இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான். 9 உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். 10 ௧0 கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்; அலப்புகிற மூடன் விழுவான். 11 ௧௧ நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 12 ௧௨ பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும். 13 ௧௩ புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. 14 ௧௪ ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. 15 ௧௫ செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும். 16 ௧௬ நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும். 17 ௧௭ புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். 18 ௧௮ பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன். 19 ௧௯ சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது; தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 20 ௨0 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. 21 ௨௧ நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்; மூடரோ மதியீனத்தினால் சாவார்கள். 22 ௨௨ யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்; அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார். 23 ௨௩ தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு. 24 ௨௪ துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். 25 ௨௫ சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்; 26 ௨௬ பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். 27 ௨௭ யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்; துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும். 28 ௨௮ நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும். 29 ௨௯ யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு, அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம். 30 ௩0 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை. 31 ௩௧ நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும். 32 ௩௨ நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்; துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.

< நீதிமொழிகள் 10 >