< மத்தேயு 3 >

1 அந்த நாட்களிலே யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்திரத்தில் வந்து: 2 “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது” என்று பிரசங்கம் செய்தான். 3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே. 4 இந்த யோவான் ஒட்டகமயிர் ஆடையை அணிந்து, தன் இடுப்பிலே வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாக இருந்தது. 5 அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயாவில் உள்ள அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் அனைவரும் அவனிடத்திற்குப்போய், 6 தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். 7 பரிசேயர்களிலும் சதுசேயர்களிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்? 8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். 9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினைக்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 10 ௧0 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே, நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும். 11 ௧௧ மனந்திரும்புதலுக்கென்று நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின்பு வருகிறவரோ என்னைவிட வல்லவராக இருக்கிறார், அவருடைய காலணிகளைச் சுமக்கிறதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 12 ௧௨ தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான். 13 ௧௩ அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். 14 ௧௪ யோவான் அவருக்குத் தடைசெய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். 15 ௧௫ இயேசு அவனுக்கு மறுமொழியாக: இப்பொழுது இதற்கு சம்மதி, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாக இருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு சம்மதித்தான். 16 ௧௬ இயேசு ஞானஸ்நானம் பெற்று, தண்ணீரிலிருந்து கரையேறின உடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவியானவர் புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். 17 ௧௭ அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன் என்று உரைத்தது.

< மத்தேயு 3 >