< லேவியராகமம் 17 >

1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 2 “நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; யெகோவா கட்டளையிடுகிறது என்னவென்றால்: 3 இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலாகிய யெகோவாவுடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக, யெகோவாவுக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல், 4 முகாமிற்குள்ளேயோ அல்லது வெளியேயோ அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாகக் கருதப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான். 5 ஆகையால் இஸ்ரவேல் மக்கள் வெளியிலே பலியிடுகிற தங்களுடைய பலிகளை, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் யெகோவாவுக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள். 6 அங்கே ஆசாரியன், இரத்தத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன். 7 தாங்கள் முறைகேடான முறையில் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாமல் இருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக. 8 மேலும் நீ அவர்களை நோக்கி: “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்கதகனபலி முதலானவைகளைச் செலுத்தி, 9 அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான் என்று சொல். 10 ௧0 “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் எந்தவொரு இரத்தத்தைச் சாப்பிட்டால், இரத்தத்தைச் சாப்பிட்ட அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி அவனை அறுப்புண்டுபோகச் செய்வேன். 11 ௧௧ மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. 12 ௧௨ ஆகவே உங்களில் ஒருவனும் இரத்தம் சாப்பிடவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் சாப்பிடவேண்டாம்” என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன். 13 ௧௩ “இஸ்ரவேல் மக்களிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சாப்பிடத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பறவையையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தச்செய்து, மண்ணினால் அதை மூடவேண்டும். 14 ௧௪ சகல மாம்சத்திற்கும் இரத்தம் உயிராக இருக்கிறது; இரத்தம் உயிருக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தம் தானே; அதைச் சாப்பிடுகிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன். 15 ௧௫ தானாக இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது சாப்பிட்டவன் எவனும் அவன் இஸ்ரவேலனானாலும் அந்நியனானாலும், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாக இருப்பான். 16 ௧௬ அவன் தன் உடைகளைத் துவைக்காமலும், குளிக்காமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல்” என்றார்.

< லேவியராகமம் 17 >