< புலம்பல் 1 >

1 2 ஐயோ, மக்கள் மிகுந்த நகரம் தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! தேசங்களில் பெரியவளும், அந்த தேசங்களில் இளவரசியுமாயிருந்தவள் வரிகட்டுகிறவளானாளே!
ஒருகாலத்தில் மக்களால் நிறைந்திருந்த எருசலேம் பட்டணம், இப்பொழுது எவ்வளவு பாழாய்க் கிடக்கிறது! ஒருகாலத்தில் நாடுகளின் மத்தியில் மிகவும் பெரியவளாய் இருந்தவள், இன்று ஒரு விதவையைப் போலானாளே! நாடுகளின் மத்தியில் அரசியாய் இருந்தவள் இப்பொழுது அடிமையானாளே.
2 இரவுநேரத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்; அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுக்குப் பிரியமானவர்களில் அவளைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை; அவளுடைய நண்பர்கள் அனைவரும் அவளுக்குத் துரோகிகளும் விரோதிகளுமானார்கள்.
இரவில் அவள் மனங்கசந்து அழுகிறாள், அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வடிகிறது. அவளுக்குப் பிரியமானவர்களில் அவளை ஆறுதல் செய்வதற்கு ஒருவரும் இல்லை. அவளுடைய நண்பர்கள் அவளுக்கு துரோகம் செய்தார்கள்; அவர்கள் அவளின் விரோதிகளானார்கள்.
3 யூதா மக்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமை வேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் அந்நிய மக்களுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையமாட்டாள்; அவளைத் துன்பப்படுத்துகிற அனைவரும் அவளை அவளுடைய இக்கட்டான நேரங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.
துன்பத்தையும், கொடுமையான அடிமை வேலையையும் அனுபவித்தபின், யூதா நாடுகடத்தப்பட்டுப் போனாள். பிறநாடுகளின் மத்தியில் அவள் குடியிருக்கிறாள்; ஆனால் அவளுக்கோ இளைப்பாறும் இடம் இல்லை. அவளுடைய துன்பத்தின் மத்தியில் அவளைப் பின்தொடர்ந்த யாவரும் அவளைப் பிடித்துக்கொண்டார்கள்.
4 பண்டிகைக்கு வருபவர்கள் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவளுடைய வாசல்கள் எல்லாம் பயனற்றுக்கிடக்கிறது; அவளுடைய ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவளுடைய இளம்பெண்கள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.
நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்கு ஒருவரும் வராததால், சீயோனின் தெருக்கள் துக்கங்கொண்டாடுகின்றன. அவளுடைய வாசல்கள் யாவும் பாழாய்க் கிடக்கின்றன. அவளுடைய ஆசாரியர்கள் புலம்புகிறார்கள். அவளுடைய இளம்பெண்கள் துயரப்படுகிறார்கள், அவள் கசப்பான வேதனையில் இருக்கிறாள்.
5 அவளுடைய விரோதிகள் அவளுக்குத் தலைவர்களானார்கள், அவளுடைய பகைவர்கள் செழித்திருக்கிறார்கள்; அவளுடைய மிகுதியான பாவங்களுக்காக யெகோவா அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.
அவளுடைய பகைவர்கள் அவளுக்கு தலைவர்களாகி விட்டார்கள்; அவளுடைய பகைவர்கள் சுகவாழ்வு அடைந்திருக்கிறார்கள். அவளுடைய அநேக பாவங்களின் நிமித்தம் யெகோவா அவளுக்கு துக்கத்தைக் கொடுத்தார். அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
6 சீயோனாகிய மகளுடைய அழகெல்லாம் அவளை விட்டுப்போனது; அவளுடைய தலைவர்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, பின்தொடருகிறவனுக்கு முன்பாக பலமில்லாமல் நடந்துபோனார்கள்.
சீயோன் மகளின் சீர்சிறப்பெல்லாம் அவளைவிட்டு நீங்கிற்று. அவளுடைய இளவரசர்கள் மேய்ச்சலை காணாத மான்களைப் போலானார்கள்; அவர்கள் தங்களை துரத்துகிறவர்களுக்கு முன்பாக பலவீனமுற்று தப்பி ஓடினார்கள்.
7 தனக்குச் சிறுமையும் தவிப்பும் ஏற்பட்ட நாட்களிலே எருசலேம் ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்பவர்கள் இல்லாமல் அவளுடைய மக்கள் விரோதிகளின் கையிலே விழும்போது, பகைவர்கள் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வு நாட்களைக் குறித்து ஏளனம் செய்தார்கள்.
எருசலேம் துன்பப்பட்டு அலைந்த நாட்களில், முற்காலத்தில் தனக்குச் சொந்தமாயிருந்த செல்வங்களையெல்லாம் நினைவுகூருகிறாள். அவளுடைய மக்கள் பகைவரின் கையில் விழுந்தபோது, அவளுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருந்ததில்லை. மக்களுக்கு ஏற்பட்ட அழிவைக் கண்டு, அவளுடைய பகைவர் அவளைப் பார்த்து நகைத்தார்கள்.
8 எருசலேம் மிகுதியாகப் பாவம்செய்தாள்; ஆதலால் தீட்டான பெண்ணைப்போலானாள்; அவளைக் கனப்படுத்தியவர்கள் எல்லோரும் அவளை அசட்டை செய்கிறார்கள்; அவளுடைய நிர்வாணத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.
எருசலேம் பெரும் பாவம் செய்து அசுத்தமடைந்தாள். அவளை கனம்பண்ணின யாவரும் அவளுடைய நிர்வாணத்தைக் கண்டதினால், அவளை அவமதிக்கிறார்கள்; அவள் தனக்குள் அழுது, தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள்.
9 அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினைக்காமல் இருந்தாள்; ஆகையால் அதிசயமாகத் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுபவர்கள் இல்லை; யெகோவாவே, என் சிறுமையைப் பாரும்; பகைவன் பெருமைபாராட்டினானே.
அவளுடைய அசுத்தம் அவளுடைய உடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது; அவள் தன்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவில்லை. ஆகையினால் அவளுடைய வீழ்ச்சி அதிர்ச்சியாயிருந்தது; அவளை தேற்றுவார் ஒருவரும் இல்லை. “யெகோவாவே, என்னுடைய துன்பத்தைப் பாரும்; என்னுடைய பகைவன் என்னை வெற்றி கொண்டானே” என்று அழுகிறாள்.
10 ௧0 அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரக்கூடாதென்று தேவரீர் விலக்கிய அன்னியர்கள் உமது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதைக் கண்டாள்.
பகைவன் எருசலேமின் இன்பமான எல்லாவற்றின்மேலும் தன் கைகளை வைத்தான். அவளுடைய பரிசுத்த இடத்திற்குள் பிறநாட்டினர் நுழைவதை அவள் கண்டாள். யெகோவா தடைசெய்தவர்கள் அவருடைய சபைக்குள் நுழைவதை அவள் கண்டாள்.
11 ௧௧ அவளுடைய மக்களெல்லோரும் ஆகாரத்தைத்தேடித் தவிக்கிறார்கள்; தங்களுடைய உயிரைக் காப்பாற்றத் தங்களுக்குப் பிரியமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; யெகோவாவே, நோக்கிப்பாரும்; நினைக்கப்படாதவளானேன்.
அவளுடைய மக்கள் யாவரும் அப்பத்தைத் தேடித் தவிக்கிறார்கள். அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்கள் திரவியங்களை உணவுக்காக பண்டம் மாற்றம் செய்கிறார்கள். அவள், “யெகோவாவே கவனித்துப் பாரும்! நான் அவமதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று துக்கிக்கிறாள்.
12 ௧௨ வழியில் நடந்துபோகிற அனைத்து மக்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவலையில்லையா? யெகோவா தாம் மிகவும் கோபப்பட்ட நாளிலே என்னை வருத்தப்படுத்தியதால் எனக்கு ஏற்பட்ட என் துக்கத்திற்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
“இந்த வழியாய் கடந்துபோகிறவர்களே, உங்களுக்கு இது ஒரு பொருட்டாய் தோன்றவில்லையோ? சுற்றிலும் நோக்கிப்பாருங்கள். யெகோவா தமது கடுங்கோபத்தின் நாளில், என்மேல் கொண்டுவந்த வேதனையைப்போன்ற வேதனை ஏதும் உண்டோ?
13 ௧௩ உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழச்செய்தார்; என்னைப் பாழாக்கினார்; தினமும் நான் பெலவீனப்பட்டுப்போகிறேன்.
“யெகோவா உயரத்திலிருந்து நெருப்பை அனுப்பினார். அதை எனது எலும்புகளுக்குள் இறங்கப் பண்ணினார். அவர் என்னுடைய கால்களுக்கு ஒரு வலையை விரித்து, என்னைப் பின்னோக்கி திருப்பிவிட்டார். அவர் என்னைப் பாழாக்கி, நாள்தோறும் மயக்கமடையச் செய்தார்.
14 ௧௪ என் மீறுதல்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை இழக்கச்செய்தார்; நான் எழுந்திருக்க முடியாதபடி ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
“என்னுடைய பாவங்கள் ஒரு நுகமாக கட்டப்பட்டிருக்கின்றன; அவை அவருடைய கைகளால் ஒன்றாக்கப்பட்டு, என் கழுத்தின்மேல் போடப்பட்டுள்ளன. யெகோவா என் பெலனை குன்றப்பண்ணினார். என்னால் எதிர்க்க முடியாதவர்களிடத்தில் என்னை ஒப்புக்கொடுத்து விட்டார்.
15 ௧௫ என்னிடத்திலுள்ள பலசாலிகளாகிய எனக்குரிய அனைவரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபர்களை நொறுக்குவதற்காக எனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சைப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர், மகளாகிய யூதா என்னும் இளம்பெண்ணை மிதித்தார்.
“என் மத்தியிலிருந்த இராணுவவீரர்களையெல்லாம் யெகோவா புறக்கணித்துவிட்டார்; என்னிடமுள்ள என்னுடைய வாலிபரை நசுக்கும்படி, எனக்கெதிராக ஒரு படையை அழைத்திருக்கிறார். யூதாவின் கன்னிகையை யெகோவா தம் திராட்சை ஆலையில் மிதித்துப்போட்டார்.
16 ௧௬ இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே கண்ணீரை சிந்துகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்; பகைவன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.
“இதனால்தான் நான் அழுகிறேன். என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது. என்னைத் தேற்ற என் அருகில் யாரும் இல்லை. என் ஆவிக்கு புத்துயிர் அழிக்கவும் ஒருவரும் இல்லை. பகைவன் வெற்றிகொண்டபடியினால், என்னுடைய பிள்ளைகள் ஆதரவற்றுப் போனார்கள்.”
17 ௧௭ சீயோன் தன் கைகளை உதவிக்கா விரிக்கிறாள்; அவளைத் தேற்றுபவர்கள் ஒருவருமில்லை; யெகோவா யாக்கோபைச் சுற்றிலும் உள்ளவர்களை அவனுக்கு விரோதிகளாகக் கட்டளையிட்டார்; அவர்களுக்குள்ளே எருசலேம் தீட்டான பெண்ணுக்கு ஒப்பானாள்.
சீயோன் தன் கைகளை உதவிக்காக நீட்டுகிறாள், அவளை ஆறுதல்படுத்த ஒருவரும் இல்லை. யாக்கோபின் அயலவர் அவனுக்குப் பகைவர்களாகும்படி யெகோவா நியமித்திருக்கிறார்; அவர்கள் மத்தியில் எருசலேம் ஒரு அசுத்தப் பொருளாயிற்று.
18 ௧௮ யெகோவா நீதிபரர்; அவருடைய கட்டளைகளுக்கு விரோதமாக நான் எழும்பினேன்; மக்களே, நீங்கள் எல்லோரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என்னுடைய இளம்பெண்களும், வாலிபர்களும் சிறைப்பட்டுப்போனார்கள்.
“யெகோவா நேர்மையுள்ளவர், இருந்தாலும் நான் அவருடைய கட்டளைக்கு எதிராகக் கலகம் செய்தேன். மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள்; என்னுடைய துன்பத்தைப் பாருங்கள். என் இளைஞரும், இளம்பெண்களும் நாடுகடத்தப்பட்டுப் போனார்கள்.
19 ௧௯ என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தங்களுக்கு ஆகாரம் தேடும்போது நகரத்தில் மூச்சு அடங்கி இறந்துபோனார்கள்.
“நான் என் கூட்டாளிகளை கூப்பிட்டேன், அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள். என்னுடைய ஆசாரியரும், முதியோரும் தங்கள் உயிரைக் காக்க உணவு தேடுகையில், பட்டணத்தில் அழிந்துபோனார்கள்.
20 ௨0 யெகோவாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது; நான் மிகவும் துரோகம் செய்ததினால் என் இருதயம் வேதனைப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கியது, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.
“யெகோவாவே பாரும்! நான் எவ்வளவாய் துயரப்பட்டிருக்கிறேன். நான் எனக்குள்ளே கடும் வேதனைப்படுகிறேன். என் இருதயத்தில் கலக்கமுற்றிருக்கிறேன். ஏனெனில் நான் அதிகமாய் கலகம் பண்ணினேன். வெளியே, வாள் அழிக்கிறது; உள்ளே, மரணம் மட்டுமே இருக்கிறது.
21 ௨௧ நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுபவர்கள் ஒருவரும் இல்லை; என் பகைவர்கள் எல்லோரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்ததினால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் சொன்ன நாளை வரச்செய்வீர். அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.
“என்னுடைய புலம்பலை மக்கள் கேட்டிருக்கிறார்கள், ஆனால் என்னைத் தேற்றுவதற்கோ ஒருவரும் இல்லை. என் பகைவர்கள் யாவரும் எனக்கு வந்த துயரத்தைக் கேள்விப்பட்டு, நீர் அதை செய்தபடியால் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களும் என்னைப் போலாகும்படி நீர் அறிவித்த நாளை வரப்பண்ணும்.
22 ௨௨ அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்திற்கு முன்பாக வரட்டும். என்னுடைய சகல பாவங்களுக்காக நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலவீனமாயிருக்கிறது.
“அவர்களுடைய கொடுமைகள் எல்லாம் உமக்கு முன்பாக வரட்டும்; என்னுடைய எல்லா பாவங்களுக்காக நீர் எனக்குச் செய்ததுபோலவே, அவர்களுக்கும் செய்யும். என் புலம்பல்கள் அநேகம், என் இருதயமும் சோர்ந்துபோகிறது.”

< புலம்பல் 1 >