< யோவான் 8 >

1 இயேசு ஒலிவமலைக்குப் போனார்.
இயேசுவோ ஒலிவமலைக்குச் சென்றார்.
2 மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்.
அதிகாலையிலே அவர் மீண்டும் ஆலய முற்றத்திற்கு வந்தார். மக்கள் எல்லோரும் அவரைச் சுற்றிக் கூடிவந்தனர். இயேசு அவர்களுக்கு போதிப்பதற்காக உட்கார்ந்தார்.
3 அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேதபண்டிதர்களும், பரிசேயர்களும் அவரிடத்தில் அழைத்துவந்து, அவளை நடுவே நிறுத்தி:
அப்பொழுது மோசேயின் சட்ட ஆசிரியரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அங்கு கொண்டுவந்தார்கள். அவர்கள் அவளை அங்கிருந்த எல்லோருக்கும் நடுவாக நிறுத்தினார்கள்.
4 போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டாள்.
அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே பிடிக்கப்பட்டாள்.
5 இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளைக் கொடுத்திருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசேயின் சட்டத்தில் மோசே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நீர் என்ன சொல்கிறீர்?” என்றார்கள்.
6 அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாக்குவதற்கு, அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள் இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
இயேசுவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரும்படி, ஒரு சூழ்ச்சியாக அவர்கள் இந்தக் கேள்வியை கேட்டார்கள். ஆனால் இயேசுவோ, குனிந்து தமது விரலினால் தரையிலே எழுதத் தொடங்கினார்.
7 அவர்கள் தொடர்ந்து அவரைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மீது முதலாவது கல்லெறியட்டும் என்று சொல்லி,
அவர்கள் தொடர்ந்து அவரைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததினால், இயேசு நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “உங்களில் யாராவது பாவமில்லாதவன் இருந்தால், அவன் முதலாவதாக இவள்மேல் கல்லெறியட்டும்” என்றார்.
8 அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார்.
இயேசு மீண்டும் குனிந்து தரையில் எழுதினார்.
9 அவர்கள் அதைக்கேட்டு, தங்களுடைய மனச்சாட்சியில் உணர்த்தப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராக போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த பெண் நடுவே நின்றாள்.
அப்பொழுது, இதைக் கேட்டவர்களில், முதியோர் தொடங்கி சிறியோர் வரை ஒவ்வொருவராகப் போகத் தொடங்கினார்கள். இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண்ணும் அங்கே நடுவே நின்றுகொண்டிருந்தாள்.
10 ௧0 இயேசு நிமிர்ந்து அந்த பெண்ணைத்தவிர வேறொருவரையும் காணாமல்: பெண்ணே, உன்மேல் குற்றஞ்சுமத்தினவர்கள் எங்கே? ஒருவன்கூட உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.
இயேசு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “மகளே, அவர்கள் எங்கே? ஒருவனும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கவில்லையோ?” என்று கேட்டார்.
11 ௧௧ அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளைப் பார்த்து: நானும் உன்னைத் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவம் செய்யாதே என்றார்.
அதற்கு அவள், “இல்லை ஆண்டவரே” என்றாள். அப்பொழுது இயேசு அவளிடம், “நானும் உன்னை குற்றவாளியாகத் தீர்க்கமாட்டேன். இப்பொழுது நீ போகலாம், இனிப் பாவம் செய்யாதே” என்றார்.
12 ௧௨ மறுபடியும் இயேசு மக்களைப் பார்த்து: நான் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடக்காமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்.
மீண்டும் இயேசு மக்களுடன் பேசத்தொடங்கி, “நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் ஒருபோதும் இருளில் நடக்கமாட்டான். ஜீவ வெளிச்சம் அவர்களுடன் இருக்கும்” என்றார்.
13 ௧௩ அப்பொழுது பரிசேயர்கள் அவரைப் பார்த்து: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள்.
அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “இதோ பார், நீயே உன்னைக் குறித்த சாட்சி கொடுக்கிறாயே; உனது சாட்சி உண்மையல்ல” என்றார்கள்.
14 ௧௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாக இருக்கிறது; ஏனென்றால், நான் எங்கே இருந்து வந்தேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கே இருந்து வருகிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் உங்களுக்குத் தெரியாது.
இயேசு அதற்குப் பதிலாக, “நானே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தாலும், எனது சாட்சி உண்மையானதே. ஏனெனில் நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், நான் எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறியாதிருக்கிறீர்கள்.
15 ௧௫ நீங்கள் மனித வழக்கத்திற்கு ஏற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை;
நீங்கள் மனிதருக்கேற்றபடி தீர்ப்புச் செய்கிறீர்கள்; நானோ ஒருவருக்கும் தீர்ப்புச் செய்வதில்லை.
16 ௧௬ நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படி இருக்கும்; ஏனென்றால், நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம்.
நான் தீர்ப்பு செய்தாலும், எனது தீர்ப்பு உண்மையானதாகவே இருக்கும். ஏனெனில் நான் தனியாக தீர்ப்பு கொடுப்பதில்லை. என்னை அனுப்பிய என் பிதாவும் என்னுடனேகூட இருக்கிறார்.
17 ௧௭ இரண்டு பேருடைய சாட்சி உண்மை என்று உங்களுடைய நியாயப்பிரமாணத்திலும் எழுதி இருக்கிறதே.
இரண்டு பேருடைய சாட்சி உண்மையானது என்று உங்கள் சொந்த சட்டத்திலே எழுதியிருக்கிறது.
18 ௧௮ நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாக இருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சிக் கொடுக்கிறார் என்றார்.
நான் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறேன்; என்னை அனுப்பிய பிதாவே எனது இரண்டாவது சாட்சியாயிருக்கிறார்” என்றார்.
19 ௧௯ அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு மறுமொழியாக: என்னையும் அறியீர்கள். என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார்.
அப்பொழுது அவர்கள் அவரிடம், “உமது பிதா எங்கே?” என்றார்கள். அதற்கு இயேசு, “என்னையோ, என் பிதாவையோ நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் என்னை அறிந்தால், என் பிதாவையுங்கூட அறிந்திருப்பீர்கள்” என்றார்.
20 ௨0 தேவாலயத்திலே இயேசு உபதேசம் செய்கிறபோது, காணிக்கைப்பெட்டி இருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.
இயேசு ஆலயப் பகுதியில் போதிக்கும்போது, காணிக்கை போடுகிற இடத்தின் அருகே நின்று, இந்த வார்த்தைகளைப் பேசினார். ஆனால் ஒருவனும் அவரைக் கைதுசெய்யவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.
21 ௨௧ இயேசு மறுபடியும் அவர்களைப் பார்த்து: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள்; நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்றார்.
மீண்டும் இயேசு அவர்களிடம், “நான் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் பாவத்திலேயே சாவீர்கள். நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது” என்றார்.
22 ௨௨ அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்திற்கு உங்களால் வர முடியாது என்கிறானே, தன்னைத்தானே கொலைசெய்து கொள்ளுவானோ என்று பேசிக்கொண்டார்கள்.
அப்பொழுது யூதர்கள், “இவன் தற்கொலை செய்துகொள்ள போகிறானா? அதனால்தான், ‘நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று சொல்கிறானோ!” என்று கேட்டார்கள்.
23 ௨௩ அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் கீழேயிருந்து உண்டானவர்கள், நான் மேலேயிருந்து உண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்து உண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவன் இல்லை.
இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் கீழேயிருந்து வந்தவர்கள்; நான் மேலேயிருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள்; நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல.
24 ௨௪ ஆகவே, நீங்கள் உங்களுடைய பாவங்களில் மரித்துப்போவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால் உங்களுடைய பாவங்களிலே மரித்துப்போவீர்கள் என்றார்.
நீங்கள் உங்கள் பாவங்களிலேயே சாவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள்” என்றார்.
25 ௨௫ அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நான் ஆரம்ப முதலாக உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர் தான்.
அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நீர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு பதிலாக, “அதைத்தான் நான் தொடக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொல்கிறேனே” என்று இயேசு சொல்லி,
26 ௨௬ உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்கள் இருக்கிறது; என்னை அனுப்பினவர் சத்தியமானவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளை உலகத்திற்குச் சொல்லுகிறேன் என்றார்.
“உங்களைப் பற்றிச் சொல்லவும், நியாயத்தீர்ப்பு அளிக்கவும் என்னிடம் அநேக காரியங்கள் இருக்கிறது. ஆனால் என்னை அனுப்பியவரிடமிருந்து கேட்டதை மட்டும் நான் உலகத்திற்கு அறிவிக்கிறேன். ஏனென்றால் என்னை அனுப்பியவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்” என்றார்.
27 ௨௭ பிதாவைக்குறித்துப் பேசினார் என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
இயேசு பிதாவாகிய இறைவனைக் குறித்தே பேசுகிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
28 ௨௮ ஆதலால் இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் மனிதகுமாரனை உயர்த்தினபின்பு, நானே அவர் என்றும், நான் என் சொந்தமாக ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.
எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் மானிடமகனாகிய என்னை உயர்த்திய பின்பு, நானே அவர் என்றும், எனது சுயமாக நான் ஒன்றும் செய்கிறதில்லையென்றும், பிதா எனக்கு போதித்தபடியே நான் இவற்றைச் சொல்கிறேன் என்றும் அறிந்துகொள்வீர்கள்.
29 ௨௯ என்னை அனுப்பினவர் என்னுடனே இருக்கிறார், பிதாவிற்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறதினால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார்.
என்னை அனுப்பிய பிதா என்னுடனே இருக்கிறார்; அவர் என்னைத் தனிமையாய் விட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பிரியமானதையே நான் எப்பொழுதும் செய்கிறேன்” என்றார்.
30 ௩0 இவைகளை அவர் சொன்னபோது, அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
அவர் இந்தக் காரியங்களைக் குறித்துச் சொன்னபோது, பலர் அவரில் விசுவாசம் வைத்தார்கள்.
31 ௩௧ இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களைப் பார்த்து: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் உண்மையாகவே என் சீடராக இருப்பீர்கள்;
இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களிடம், “நீங்கள் எனது உபதேசத்தில் தொடர்ந்து நிலைத்திருந்தால், நீங்கள் உண்மையாகவே எனது சீடர்களாய் இருப்பீர்கள்.
32 ௩௨ சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
அப்பொழுது நீங்கள் சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார்.
33 ௩௩ அவர்கள் அவருக்கு மறுமொழியாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறோம், நாங்கள் ஒருபோதும் ஒருவனுக்கும் அடிமைகளாக இருக்கவில்லை; விடுதலையாவீர்கள் என்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள்.
அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம். நாங்கள் ஒருபோதும் ஒருவருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. அப்படியிருக்க நாங்கள் விடுதலையாவோம் என்று நீர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள்.
34 ௩௪ இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: பாவம் செய்கிறவன் எவனும் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
அதற்கு இயேசு பதிலாக, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாவம் செய்கிற ஒவ்வொருவரும் பாவத்திற்கு அடிமையாய் இருக்கிறார்கள்.
35 ௩௫ அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். (aiōn g165)
ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான். (aiōn g165)
36 ௩௬ ஆகவே, குமாரன் உங்களை விடுதலை ஆக்கினால் உண்மையாகவே விடுதலை ஆவீர்கள்.
ஆகவே இறைவனின் மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையாகவே விடுதலை பெறுவீர்கள்.
37 ௩௭ நீங்கள் ஆபிரகாமின் சந்ததியார் என்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம் பெறாததினால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள்.
நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் என்னைக் கொல்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறீர்கள். ஏனெனில் எனது வார்த்தைக்கு உங்கள் உள்ளத்தில் இடமில்லை.
38 ௩௮ நான் என் பிதாவினிடத்தில் பார்த்ததைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்களுடைய பிதாவினிடத்தில் பார்த்ததைச் செய்கிறீர்கள் என்றார்.
எனது பிதாவின் முன்னிலையில் கண்டவற்றையே நான் அறிவிக்கிறேன். ஆனால் நீங்களோ உங்கள் தகப்பனிடமிருந்து கேள்விப்பட்டதையே செய்கிறீர்கள்” என்றார்.
39 ௩௯ அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்களுடைய பிதா என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாக இருந்தால் ஆபிரகாமின் செயல்களைச் செய்வீர்களே.
அதற்கு அவர்கள், “ஆபிரகாமே எங்கள் தந்தை” என்றார்கள். இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளானால் ஆபிரகாம் செய்தவற்றையே நீங்களும் செய்வீர்கள்.
40 ௪0 தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
ஆனால் நீங்களோ, இறைவனிடம் கேட்டறிந்த சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனான என்னைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ஆபிரகாம் இப்படியான காரியங்களைச் செய்யவில்லையே.
41 ௪௧ நீங்கள் உங்களுடைய பிதாவின் செயல்களைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை; ஒரே பிதா எங்களுக்கு இருக்கிறார், அவர் தேவன் என்றார்கள்.
நீங்கள் உங்கள் சொந்தத் தகப்பன் செய்ததையே செய்கிறீர்கள்” என்றார். அதற்கு அவர்கள் அவரிடம், “நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை. இறைவன் ஒருவரே எங்களுக்கும் பிதா” என்றார்கள்.
42 ௪௨ இயேசு அவர்களைப் பார்த்து: தேவன் உங்களுடைய பிதாவாக இருந்தால் என்னிடத்தில் அன்பாக இருப்பீர்கள். ஏனென்றால், நான் தேவனிடத்தில் இருந்து வந்திருக்கிறேன்; நான் நானாக வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவன் உங்கள் பிதாவாக இருந்தால், நீங்கள் என்னிலும் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் இப்பொழுது இங்கே இருக்கின்ற நான் இறைவனிடமிருந்தே வந்தேன். நான் எனது சுயவிருப்பத்தின்படி வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.
43 ௪௩ என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமல் இருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாமல் இருக்கிறதினால் அல்லவா?
நான் சொல்வது ஏன் உங்களுக்குத் தெளிவாய் இல்லை? நான் சொல்வதைக் கேட்க உங்களுக்கு மனதில்லாமல் இருக்கிறதினால்தானே.
44 ௪௪ நீங்கள் உங்களுடைய தகப்பனாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்களுடைய தகப்பனின் ஆசைகளின்படி செய்ய விருப்பமாக இருக்கிறீர்கள்; அவன் ஆரம்ப முதற்கொண்டு மனித கொலைபாதகனாக இருக்கிறான்; சத்தியம் அவனிடத்தில் இல்லாததினால் அவன் சத்தியத்திலே நிலை நிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் தகப்பனுமாக இருக்கிறதினால் அவன் பொய் பேசும்போது தன்னுடைய சுபாவத்தின்படி அப்படிப் பேசுகிறான்.
நீங்கள் உங்கள் தகப்பனான சாத்தானுக்கு உரியவர்கள். உங்கள் தகப்பனின் ஆசைகளைச் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள். அவன் தொடக்கத்திலிருந்தே கொலைகாரனாய் இருக்கிறான். அவனிடம் சத்தியமில்லை. அதனால் அவன் சத்தியத்தில் நிலைத்திருப்பதில்லை. அவன் பொய் பேசும்போது தன் சொந்த மொழியையே பேசுகிறான். ஏனெனில் அவன் ஒரு பொய்யன், பொய்களின் தகப்பன்.
45 ௪௫ நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறதினால் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை.
இருந்தும் நானோ உங்களுக்கு சத்தியத்தை சொல்கிறபடியால், நீங்கள் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்.
46 ௪௬ என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தமுடியும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருந்தும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கவில்லை.
நான் பாவம் செய்தேன் என்று என்னைக் குற்றம் சாட்டி நிரூபிக்க உங்களில் எவனால் முடியும்? நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொல்லியும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்?
47 ௪௭ தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாகாததினால் செவிகொடுக்காமல் இருக்கிறீர்கள் என்றார்.
யார் இறைவனுக்குரியவராய் இருக்கிறவர்கள், அவன் இறைவன் சொல்லும் வார்த்தையைக் கேட்கிறான். நீங்களோ இறைவனுக்குரியவர்கள் அல்லாதபடியினாலே, இறைவனுடைய வார்த்தையைக் கேளாமல் இருக்கிறீர்கள்” என்றார்.
48 ௪௮ அப்பொழுது யூதர்கள் அவருக்கு மறுமொழியாக: உன்னைச் சமாரியன் என்றும், பிசாசு பிடித்தவன் என்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள்.
அப்பொழுது யூதத்தலைவர்கள் அவரிடம், “நீ ஒரு சமாரியன். நீ பிசாசு பிடித்தவன் என்று நாங்கள் சொன்னது சரியல்லவா?” என்றார்கள்.
49 ௪௯ அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவன் இல்லை, நான் என் பிதாவை மதிக்கிறேன், நீங்கள் என்னை மதிக்காமலிருக்கிறீர்கள்.
அதற்கு இயேசு, “நான் பிசாசு பிடித்தவன் அல்ல. நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன். நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள்.
50 ௫0 நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி, நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.
நான் எனது சுய மகிமையைத் தேடவில்லை; ஆனால் எனக்காக மகிமையைத் தேடுகிறவரும் நியாயந்தீர்க்கிறவரும் ஒருவர் இருக்கிறாரே.
51 ௫௧ ஒருவன் என் வார்த்தையைக் கடைபிடித்தால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைப் பார்ப்பதில்லை என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165)
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார்கள்” என்றார். (aiōn g165)
52 ௫௨ அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீ பிசாசு பிடித்தவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன், என் வார்த்தையைக் கடைபிடித்தால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். (aiōn g165)
அப்பொழுது யூதத்தலைவர்கள், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று இப்பொழுது நாங்கள் நன்றாய் தெரிந்துகொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, யாராவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் எவ்விதத்திலும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கிறாய். (aiōn g165)
53 ௫௩ எங்களுடைய பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ யார் என்று நினைக்கிறாய் என்றார்கள்.
நீ எங்கள் தகப்பன் ஆபிரகாமைப் பார்க்கிலும் பெரியவனோ? அவர் மரித்தார், அப்படியே இறைவாக்கினரும் மரித்தார்கள். நீ உன்னை யார் என்று எண்ணுகிறாய்?” என்று கேட்டார்கள்.
54 ௫௪ இயேசு மறுமொழியாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்களுடைய தேவன் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
இயேசு அதற்கு மறுமொழியாக, “நானே என்னை மகிமைப்படுத்தினால், எனது மகிமை அர்த்தமற்றது. நீங்கள் உங்கள் இறைவன் என்று உரிமையோடு சொல்கிற, எனது பிதாவே என்னை மகிமைப்படுத்துகிறவர்.
55 ௫௫ ஆனாலும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொன்னால் உங்களைப்போல நானும் பொய்யனாக இருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கடைபிடிக்கிறேன்.
நீங்கள் அவரை அறியாதிருந்தாலும், நான் அவரை அறிந்திருக்கிறேன். நான் அவரை அறியவில்லை என்று சொன்னால், நானும் உங்களைப்போலவே ஒரு பொய்யனாய் இருப்பேன். ஆனால் நானோ அவரை அறிந்திருக்கிறேன். அவரின் வார்த்தையைக் கைக்கொள்கிறேன்.
56 ௫௬ உங்களுடைய தகப்பனாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாக இருந்தான்; பார்த்து மகிழ்ந்தான் என்றார்.
உங்கள் முற்பிதாவான ஆபிரகாம் எனது நாளைக் காண்பதை எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்தான்; அதைக்கண்டு அவன் சந்தோஷப்பட்டான்” என்றார்.
57 ௫௭ அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைப் பார்த்தாயோ என்றார்கள்.
அப்பொழுது யூதத்தலைவர்கள் அவரிடம், “உனக்கோ இன்னும் ஐம்பது வயதாகவில்லை. நீ ஆபிரகாமைக் கண்டாயோ!” என்றார்கள்.
58 ௫௮ அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாவதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
அதற்கு இயேசு, “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னமே இருக்கிறவர் நானே” என்றார்.
59 ௫௯ அப்பொழுது அவர்மேல் எறியும்படி கற்களை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தைவிட்டுப்போனார்.
இதைக் கேட்டவுடன் அவர்மேல் எறியும்படி அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் நடுவே கடந்து ஆலயப் பகுதியை விட்டு வெளியே போய்விட்டார்.

< யோவான் 8 >