< எரேமியா 14 >

1 மழை இல்லாமையைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்:
வறட்சியைக் குறித்து யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவாகும்:
2 யூதா துக்கப்படுகிறது, அதின் வாசல்கள் பெலனில்லாமல் இருக்கிறது; தரைவரை குனிந்து, கறுகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது.
யூதா துக்கப்படுகிறது; அதன் பட்டணங்கள் நலிவுறுகின்றன; அவர்கள் நாட்டுக்காகப் புலம்புகிறார்கள். எருசலேமிலிருந்து ஒரு அழுகுரல் எழும்புகிறது.
3 அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப்போய்த் தண்ணீர் கிடைக்காமல் வெறும் பாத்திரங்களோடு திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.
உயர்குடி மக்கள் தங்கள் வேலைக்காரரை தண்ணீர் எடுப்பதற்கு அனுப்புகிறார்கள். அவர்கள் போய் தொட்டிகளில் தண்ணீரைக் காணாமல், தங்கள் ஜாடிகளை வெறுமையாகவே கொண்டுவருகிறார்கள். அவர்கள் மனச்சோர்வுடனும், ஏமாற்றத்துடனும் தங்கள் தலைகளை மூடிக்கொள்கிறார்கள்.
4 தேசத்தின்மேல் மழை இல்லாததினால் தரை வெடித்திருக்கிறது; பயிர் செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள்.
நாட்டில் மழையில்லாததால் நிலம் வெடித்திருக்கிறது. விவசாயிகள் மனச்சோர்வுடன் தங்கள் தலைகளை மூடிக்கொள்கிறார்கள்.
5 வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல் இல்லாததினால் அதை விட்டு ஓடிப்போகும்.
புல் இல்லாததினால் வயல்வெளியிலுள்ள பெண்மானும் புதிதாய் ஈன்ற தன் குட்டிகளை கைவிடுகிறது.
6 காட்டுக்கழுதைகள் மேடுகளில் நின்று, வலுசர்ப்பங்களைப்போல் காற்றை உட்கொள்ளுகிறது; புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார்.
காட்டுக் கழுதைகள் வறண்ட மேடுகளில் நின்று, தாகமுள்ள நரிகளைப்போல் இளைக்கின்றன. அவைகளுக்கு மேய்ச்சல் நிலமின்றி கண்பார்வை மங்கிவிடுகிறது.
7 யெகோவாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய பெயரால் கிருபைசெய்யும்; எங்கள் முறைகேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்.
எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாகச் சாட்சி கூறினாலும், யெகோவாவே, உமது பெயரின் நிமித்தம் நீர் ஏதாவது எங்களுக்கு செய்யும். எங்கள் பின்மாற்றம் பெரிதாயிருக்கிறது. நாங்கள் உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்திருக்கிறோம்.
8 இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் அந்நிய மக்களைப்போலவும், இரவுதங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்?
இஸ்ரயேலின் எதிர்ப்பார்ப்பே, துயர வேளையின் மீட்பரே, நீர் நாட்டில் ஒரு அந்நியனைப்போலவும், ஒரு இரவு மட்டும் தங்கும் பயணியைப்போலவும் ஏன் இருக்கிறீர்?
9 நீர் சோர்ந்துபோன மனிதனைப்போலவும், காப்பாற்ற முடியாத பலசாலியைப்போலவும் இருப்பானேன்? யெகோவாவே, நீர் எங்கள் நடுவிலிருக்கிறவராமே; உம்முடைய பெயர் எங்களுக்குச் சூட்டப்பட்டுமிருக்கிறதே; எங்களைவிட்டுப் போகாதிரும்.
நீர் திகைப்படைந்த மனிதனைப்போலவும், காப்பாற்ற வலுவற்ற போர்வீரனைப்போலவும் ஏன் இருக்கிறீர்? யெகோவாவே, நீர் எங்கள் மத்தியில் இருக்கிறீர்; நாங்கள் உமது பெயரைத் தரித்திருக்கிறோம். எங்களைக் கைவிடாதேயும்.
10 ௧0 அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல், அலைய விரும்புகிறார்களென்று யெகோவா இந்த மக்களைக்குறித்துச் சொல்லுகிறார்; ஆகையால், யெகோவா அவர்கள்மேல் பிரியமாயிராமல், இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து, அவர்கள் பாவங்களை விசாரிப்பார்.
மேலும் இந்த மக்களைப் பற்றி யெகோவா சொல்வது இதுவே: இவர்கள் சுற்றித்திரிய பெரிதும் விரும்புகிறார்கள். தங்கள் கால்களைக் கட்டுப்படுத்துகிறதில்லை. ஆகையினால் யெகோவா அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் இப்பொழுது அவர்களின் கொடுமைகளை நினைத்து, அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார்.
11 ௧௧ யெகோவா என்னை நோக்கி: நீ இந்த மக்களுக்கு நன்மையுண்டாக விண்ணப்பம் செய்யவேண்டாம்.
மேலும் யெகோவா என்னிடம், இந்த மக்களின் நன்மைக்காக நீ என்னிடம் விண்ணப்பம் செய்யவேண்டாம்.
12 ௧௨ அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளை நோயினாலும் நான் அவர்களை அழிப்பேன் என்றார்.
அவர்கள் உபவாசித்தாலும் நான் அவர்களுடைய கூப்பிடுதலைக் கேட்கமாட்டேன். அவர்கள் தகனபலியையும், தானியபலியையும் படைத்தாலும், அவைகளை நான் ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன். அதற்குப் பதிலாக நான் அவர்களை வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் அழிக்கப்போகிறேன் என்றார்.
13 ௧௩ அப்பொழுது நான்: ஆ யெகோவாவாகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன்.
அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே! இந்த பொய்யான இறைவாக்கு உரைப்போர் மக்களை நோக்கி, ‘நீங்கள் வாளைக் காணமாட்டீர்கள்; பஞ்சத்தினால் பாதிக்கப்படமாட்டீர்கள்; நான் இந்த இடத்தில் உங்களுக்கு நீடித்த சமாதானத்தை நிச்சயம் தருவேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்றேன்.
14 ௧௪ அப்பொழுது யெகோவா என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் பெயரைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களுடன் பேசினதுமில்லை; அவர்கள் பொய்யான தரிசனத்தையும், பொய்யான சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் பொய்யையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.
அப்பொழுது யெகோவா என்னிடம், “பொய் இறைவாக்கு உரைப்போர் என்னுடைய பெயரைக்கொண்டு பொய்யையே இறைவாக்கு என்று சொல்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவுமில்லை; நியமிக்கவுமில்லை. அவர்களோடு பேசவுமில்லை. அவர்களோ பொய்யான தரிசனத்தையும், குறிசொல்லுதலையும், விக்கிரக வணக்கத்தையும், தங்கள் மனதின் வஞ்சகத்தையுமே இறைவாக்கு என்று உரைக்கிறார்கள்” என்றார்.
15 ௧௫ ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் பெயரைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்தில் பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் இறப்பார்கள்.
தன் பெயரினால் இறைவாக்கு உரைக்கிற பொய்யான இறைவாக்கு உரைப்போரைப்பற்றி யெகோவா சொல்வது இதுவே: “நான் அவர்களை அனுப்பவில்லை. ஆகிலும் அவர்கள், ‘இந்த நாட்டை வாளோ, பஞ்சமோ தொடாது’ என்கிறார்கள். அதே இறைவாக்கு உரைப்போர் வாளாலும், பஞ்சத்தாலும் அழிவார்கள்.
16 ௧௬ அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் மக்களும், எருசலேமின் வீதிகளில் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், மகன்களும், மகள்களும் அடக்கம்செய்வாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
அவர்களுடைய இறைவாக்கைக் கேட்கும் மக்களும் பஞ்சத்தினாலும், வாளினாலும் எருசலேமின் வீதிகளில் விழுவார்கள். அவர்களையாவது, அவர்களின் மனைவிகளையாவது, மகன்களையாவது, மகள்களையாவது அடக்கம்பண்ண ஒருவரும் இருக்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஏற்ற பேராபத்தை அவர்கள்மீது ஊற்றுவேன்” என்றார்.
17 ௧௭ என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் மக்களென்கிற மகளாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் பெரிய காயத்தினாலும் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.
இந்த வார்த்தைகளை அவர்களிடம் சொல்: “அவர்களை நோக்கி, இரவும், பகலும் என் கண்களிலிருந்து கண்ணீர் ஓயாமல் சிந்தட்டும். என் மக்கள், என் கன்னிகை மகள் கடும் காயம் அடைந்து நொறுங்குண்டிருக்கிறாள்.
18 ௧௮ நான் வெளியே போனால், இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால் இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள்; தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்கள் என்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார்.
நான் நாட்டுப்புறத்திற்கு போகையில் வாளினால் கொலையுண்டவர்களைக் காண்கிறேன். பட்டணத்துக்குள் போகையில் பஞ்சத்தால் ஏற்பட்ட அழிவையும் காண்கிறேன். இறைவாக்கினரும், ஆசாரியரும் தாங்கள் அறியாத ஒரு நாட்டிற்குப் போய்விட்டார்கள்.”
19 ௧௯ யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு இழிவானதோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக்கூடாமல் எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்திற்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்திற்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
யெகோவாவே! நீர் யூதாவை முழுவதாகப் புறக்கணித்துத் தள்ளிவிட்டீரோ? நீர் சீயோனை இகழ்கிறீரோ? நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களைத் துன்புறுத்தியிருக்கிறீர்? நாங்கள் சமாதானத்தை எதிர்பார்த்தோம்; ஆனால் ஒரு நன்மையும் வரவில்லை. குணமாகும் வேளையை எதிர்பார்த்தோம்; ஆனால் பயங்கரம் மட்டுமே காணப்பட்டது.
20 ௨0 யெகோவாவே, எங்கள் தீமையையும் எங்கள் முற்பிதாக்களின் அக்கிரமத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்; உமக்கு விரோதமாகப் பாவம் செய்தோம்.
யெகோவாவே, எங்கள் கொடுமையையும், எங்கள் முற்பிதாக்களின் குற்றத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் மெய்யாகவே உமக்கு எதிராகப் பாவம்செய்தோம்.
21 ௨௧ உம்முடைய பெயருக்காக எங்களை வெறுக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களுடன் உமக்கு இருக்கிற உடன்படிக்கை பொய்யாக்காமல் எங்களை நினைத்தருளும்.
உமது நாமத்தினிமித்தம் எங்களை வெறுக்காதேயும்; உமது மகிமையான அரியணையைக் கனவீனப்படுத்தாதேயும். நீர் எங்களுடன் செய்த உடன்படிக்கையை நினைவுகூரும். அதை முறித்து விடாதிரும்.
22 ௨௨ அன்னிய மக்களுடைய வீணான தெய்வங்களுக்குள் மழையைப் பொழியவைப்பவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டாக்கினீர்.
பிறநாட்டினரின் பயனற்ற விக்கிரகங்களில் எதுவும் மழையைப் பெய்யப்பண்ணுமோ? ஆகாயங்கள் தாமாகவே மழையைப் பொழிகின்றனவோ? இல்லை; எங்கள் இறைவனாகிய யெகோவாவே! நீரேதான் அதைச் செய்கிறீர். ஆதலால் எங்கள் எதிர்பார்ப்பு உம்மிலேயே இருக்கிறது. இதையெல்லாம் செய்கிறவர் நீரே.

< எரேமியா 14 >