< தானியேல் 1 >

1 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் ஆட்சிசெய்த மூன்றாம் வருடத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்து, அதை முற்றுகையிட்டான்.
யூதாவின் அரசன் யோயாக்கீம் ஆட்சி செய்த மூன்றாம் வருடத்தில், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதை முற்றுகையிட்டான்.
2 அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவனுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தெய்வத்தின் கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தெய்வத்தின் கருவூலத்திற்குள் வைத்தான்.
அப்பொழுது யெகோவா, யூதாவின் அரசன் யோயாக்கீமை, இறைவனின் ஆலயத்திலுள்ள சிலபொருட்களுடன் நேபுகாத்நேச்சாரிடத்தில் ஒப்புக்கொடுத்தார். அவன் இவற்றை பாபிலோனிலுள்ள தன் தெய்வத்தின் கோவிலுக்கு எடுத்துக்கொண்டு போனான். அவற்றைத் தனது தெய்வத்துக்குரிய திரவிய களஞ்சியத்தில் வைத்தான்.
3 அப்பொழுது இஸ்ரவேல் மக்களுக்குள்ளே ராஜவம்சத்தார்களிலும் உயர்குடிமக்களிலும் எந்தவொரு குறைபாடும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணர்களும், ராஜாவின் அரண்மனையிலே வேலைசெய்யத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபர்களைக் கொண்டுவரவும்,
அதன்பின் அரசன் தன் அரண்மனை அதிகாரிகளின் தலைவனாகிய அஸ்பேனாஸிடம், “நீ இஸ்ரயேலின் அரச குடும்பத்திலிருந்தும், பெருங்குடிமக்களிலிருந்தும் சிலரைத் தெரிவுசெய்துகொண்டு வா” என அவனுக்கு உத்தரவிட்டான்.
4 அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் மொழியையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் அதிகாரிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்கு கட்டளையிட்டான்.
அவர்கள் எவ்வித சரீர குறைபாடு அற்றவர்களும், வசீகரமுடையவர்களுமாயிருக்க வேண்டும். அத்துடன் அவர்கள் எல்லா விதமான கல்வியையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களும், அறிவில் சிறந்தவர்களும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலுடையவர்களுமாயிருக்க வேண்டும். அரண்மனையில் பணிசெய்யத் தகுதியுடையவர்களுமான வாலிபராய் இருக்கவேண்டும். அவன் அவர்களுக்குப் பாபிலோனிய மொழியையும், இலக்கியங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கூறினான்.
5 ராஜா, தான் சாப்பிடும் உணவிலேயும் தான் குடிக்கும் திராட்சைரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருடங்கள் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவிற்கு முன்பாக நிற்கும்படிசெய்யவும் கட்டளையிட்டான்.
அத்துடன், அரசனுடைய பந்தியில் தான் சாப்பிடும் உணவிலும், குடிக்கும் திராட்சை இரசத்திலும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கென அரசன் ஒதுக்கிக் கொடுப்பான். இவ்வாறு அவர்கள், மூன்று வருடம் பயிற்சி பெறவேண்டும். பின்னர் அவர்கள் அரச பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கட்டளையிட்டான்.
6 அவர்களுக்குள் யூதா மக்களாகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள்.
அவர்களில் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களான தானியேல், அனனியா, மீஷாயேல், அசரியா ஆகியோரும் இருந்தார்கள்.
7 அதிகாரிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவிற்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவிற்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான்.
பிரதம அதிகாரி தானியேலுக்கு, பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு, சாத்ராக் என்றும், மீஷாயேலுக்கு, மேஷாக் என்றும், அசரியாவுக்கு, ஆபேத்நேகோ என்றும் புதிய பெயர்களைக் கொடுத்தான்.
8 தானியேல் ராஜா குறித்திருக்கிற உணவினாலும் அவர் குடிக்கும் திராட்சைரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்செய்துகொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி அதிகாரிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.
ஆனால் தானியேலோ, அரச உணவினாலும், திராட்சை இரசத்தினாலும் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளக் கூடாதென தன் மனதில் உறுதி செய்திருந்தான். அவ்வாறே தன்னைக் கறைப்படுத்தாதிருக்கும்படி, பிரதம அதிகாரியிடம் அனுமதியும் கேட்டான்.
9 தேவன் தானியேலுக்கு அதிகாரிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.
அப்பொழுது பிரதம அதிகாரி தானியேலுக்குத் தயவும், அனுதாபமும் காட்டும்படி இறைவன் செய்தார்.
10 ௧0 அதிகாரிகளின் தலைவன் தானியேலை நோக்கி: உங்களுக்கு உணவையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் எஜமானுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடிருக்கிற வாலிபர்களின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாக ஏன் காணப்படவேண்டும்? அதினால் ராஜா எனக்கு மரணதண்டனை கொடுப்பாரே என்றான்.
ஆனால், பிரதம அதிகாரி தானியேலிடம், “உங்களுக்கு உணவையும், பானத்தையும் ஒழுங்கு செய்திருக்கும் என் தலைவனாகிய அரசனுக்கு நான் பயப்படுகிறேன். ஏனெனில் அவர் உங்களைப் பார்க்கும்போது, உங்கள் வயதோடொத்த வாலிபர்களைவிட, உங்கள் தோற்றம் களையிழந்து வாடிக் காணப்பட்டால், அரசன் என் தலையைத் துண்டித்துவிடுவார் என்றான்.”
11 ௧௧ அப்பொழுது அதிகாரிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனை தானியேல் நோக்கி:
தானியேல், அனனியா, மீஷாயேல், அசரியா ஆகிய நால்வரையும் பராமரிக்கும்படி, பிரதம அதிகாரியினால் நியமிக்கப்பட்ட காவலனிடம் தானியேல்,
12 ௧௨ பத்துநாட்கள்வரைக்கும் உமது அடியார்களைச் சோதித்துப்பாரும்; எங்களுக்கு சாப்பிட பருப்பு முதலான காய்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,
“தயவுசெய்து பத்து நாட்களுக்கு உமது அடியவர்களைச் சோதித்துப்பாரும். சாப்பிட காய்கறி உணவையும், குடிக்கத் தண்ணீரையுமே அன்றி வேறொன்றும் எங்களுக்குத் தரவேண்டாம்.
13 ௧௩ எங்கள் முகங்களையும், ராஜஉணவைச் சாப்பிடுகிற வாலிபர்களுடைய முகங்களையும் ஒப்பிட்டுப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியார்களுக்குச் செய்யும் என்றான்.
அதன்பின் அரச உணவு சாப்பிடும் வாலிபருடைய தோற்றத்தோடு, எங்கள் தோற்றத்தை ஒப்பிட்டுப்பாரும். பின்பு உமது விருப்பப்படியே உமது அடியார்களை நடத்தும் என்றான்.”
14 ௧௪ அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாட்கள்வரை அவர்களைச் சோதித்துப்பார்த்தான்.
அவ்வாறே அவனும் இதற்கு இணங்கி, அவர்களைப் பத்து நாட்களுக்குச் சோதித்துப்பார்த்தான்.
15 ௧௫ பத்துநாட்கள் சென்றபின்பு, ராஜஉணவைச் சாப்பிட்ட எல்லா வாலிபர்களைப்பார்க்கிலும் அவர்கள் முகம் தெளிவுள்ளதாகவும், உடல் திடமுள்ளதாகவும் காணப்பட்டது.
பத்து நாட்கள் முடிந்தபோது பார்க்கையில், அரச உணவு சாப்பிட்ட வாலிபர்களைவிட, இவர்களே ஆரோக்கியமாகவும், நல்ல புஷ்டியுடையவர்களாகவும் இருக்கக் காணப்பட்டார்கள்.
16 ௧௬ ஆகையால் மேல்ஷார் அவர்கள் சாப்பிடச்சொன்ன உணவையும், அவர்கள் குடிக்கச்சொன்ன திராட்சைரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான்.
எனவே காவலன் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சிறந்த உணவையும், குடிக்க வேண்டிய திராட்சை இரசத்தையும் எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக மரக்கறி உணவையே அவர்களுக்குக் கொடுத்துவந்தான்.
17 ௧௭ இந்த நான்கு வாலிபர்களுக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் கனவுகளையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்.
இறைவன் இந்த நான்கு வாலிபருக்கும் அறிவையும், எல்லாவித இலக்கியங்களையும், கல்வியையும், விளங்கிக்கொள்ளும் ஆற்றலையும் கொடுத்தார். தானியேலினால் எல்லா விதமான தரிசனங்களையும், கனவுகளையும் விளங்கிக்கொள்ளக் கூடியதாயிருந்தது.
18 ௧௮ அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, அதிகாரிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான்.
அவர்களை உள்ளே கொண்டுவரும்படி அரசன் நியமித்த நாளில், பிரதம அதிகாரி அவர்களை நேபுகாத்நேச்சார் முன் கொண்டுவந்தான்.
19 ௧௯ ராஜா அவர்களுடன் பேசினான்; அவர்கள் எல்லோருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவனும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள்.
அரசன் அவர்களோடு பேசியபோது தானியேல், அனனியா, மீஷாயேல், அசரியா ஆகியோருக்கு இணையாக ஒருவனும் இல்லாதிருப்பதைக் கண்டான்; ஆகவே அவர்கள் அரச பணிசெய்ய அமர்த்தப்பட்டார்கள்.
20 ௨0 ஞானத்திற்கும் புத்திக்குமுரிய எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்ஜியம் எங்குமுள்ள சகல ஞானிகளிலும் சோதிடர்களிலும் அவர்களைப் பத்துமடங்கு திறமையுள்ளவர்களாகக் கண்டான்.
எல்லாவித ஞானத்தையும், பகுத்தறிவையும் குறித்து அரசன் அவர்களிடம் கேள்விகள் கேட்டபோது, தனது அரசாட்சியில் உள்ள எல்லா மந்திரவாதிகளையும், மாயவித்தைக்காரர்களையும்விட, பத்து மடங்கு சிறப்புடையவர்களாக அரசன் இவர்களைக் கண்டான்.
21 ௨௧ கோரேஸ் ஆட்சிசெய்யும் முதலாம்வருடம்வரை தானியேல் அங்கே இருந்தான்.
கோரேஸ் அரசனின் ஆட்சியின் முதலாம் வருடம்வரை தானியேல் அங்கேயே இருந்தான்.

< தானியேல் 1 >