< ஆமோஸ் 6 >

1 சீயோனிலே கவலையற்றிருப்பவர்களும் சமாரியாவின் மலையை நம்பிக்கொண்டிருக்கிறவர்களும், தேசத்தின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ,
சீயோனில் உல்லாசமாய் இருக்கிறவர்களே, சமாரியா மலையில் பாதுகாப்பாய் இருக்கிறதாக எண்ணுகிறவர்களே, இஸ்ரயேல் மக்கள் தேடிவரும் முதன்மையான நாட்டின் உயர்குடி மனிதரே உங்களுக்கு ஐயோ கேடு,
2 நீங்கள் கல்னேவரை சென்று, அந்த இடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்திற்குப்போய், பெலிஸ்தர்களுடைய காத் பட்டணத்திற்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்ஜியங்களைவிட நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்களுடைய எல்லைகளைவிட விரிவான இடமானவைகளோ என்றும் பாருங்கள்.
கல்னே பட்டணத்துக்குப் போய் அதைப் பாருங்கள், அங்கிருந்து ஆமாத் எனும் பெருநகரத்திற்குப் போங்கள். அதன்பின் பெலிஸ்தியாவிலுள்ள காத்திற்குச் செல்லுங்கள். உங்கள் இரு அரசுகளைவிட அவை சிறந்தவையோ? அவர்களுடைய நாடு உங்கள் நாட்டைவிடப் பெரியதோ? அவை எப்படி அழிக்கப்பட்டிருக்கின்றன.
3 தீங்குநாள் தூரமென்று எண்ணிக் கொடுமையின் இருக்கை கிட்டவரும்படிச் செய்து,
நீங்கள் தீமையின் நாளைப் பற்றி எண்ணாதிருக்கிறீர்கள். அதனால் வன்முறை ஆட்சியை அருகில் கொண்டுவருகிறீர்கள்.
4 தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் சவுக்கியமாகப் படுத்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று,
நீங்களோ தந்தம் பதித்த கட்டில்களில் படுக்கிறீர்கள். பஞ்சணை இருக்கைகளில் சொகுசாய் சாய்ந்திருக்கிறீர்கள். மந்தையில் சிறந்த ஆட்டுக்குட்டிகளையும், கொழுத்த கன்றுகளையும் அடித்து விருந்து கொண்டாடுகிறீர்கள்.
5 தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டாக்கி,
தாவீதைப்போல் உங்கள் யாழ்களை மீட்டுகிறீர்கள். புதிய இசைக்கருவிகளை உண்டாக்கிக் கொள்கிறீர்கள்.
6 பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த வாசனைத்தைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்பிற்கு நேரிட்ட ஆபத்திற்குக் கவலைப்படாமல் போகிறார்கள்.
பெரிய கிண்ணங்களில் நிறைய திராட்சை இரசம் குடிக்கிறீர்கள், சிறந்த நறுமண தைலங்களைப் பூசிக்கொள்கிறீர்கள்; ஆயினும் யோசேப்பின் மக்களுக்கு வரப்போகும் அழிவிற்காக நீங்கள் துக்கப்படுகிறதில்லை.
7 ஆகையால் அவர்கள் சிறையிருப்பிற்குப் போகிறவர்களின் முதல் வரிசையிலே போவார்கள்; இப்படியே உல்லாசமாகப் படுத்தவர்களின் விருந்து கொண்டாடல் நின்றுபோகும்.
ஆதலால் நாடுகடத்தப்படும்போது, நீங்களே முதலாவதாகக் கொண்டுபோகப்படுவீர்கள். உங்கள் விருந்தும், களியாட்டமும் முடிவுக்கு வரும்.
8 நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரண்மனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.
ஆண்டவராகிய யெகோவா தமது பெயரில் ஆணையிட்டிருக்கிறார்; சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறார். யாக்கோபின் அகந்தையை நான் அருவருக்கிறேன். அவனுடைய கோட்டைகளையும் வெறுக்கிறேன். ஆதலால் அவர்களுடைய சமாரியா நகரத்தையும், அதிலுள்ள அனைத்தையும் பகைவனிடம் ஒப்புக்கொடுப்பேன்.
9 ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாக இருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள்.
அப்பொழுது ஒரு குடும்பத்தில் பத்துபேர் எஞ்சியிருந்தால், அவர்களும் சாவார்கள்.
10 ௧0 அவர்களுடைய இனத்தானாவது பிரேதத்தை எறிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகும்படி, அவைகளை எடுத்து, வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராவது உண்டோ என்று கேட்பான், அவன் இல்லை என்பான்; அப்பொழுது இவன்: நீ மௌனமாக இரு; யெகோவாவுடைய நாமத்தைச் சொல்லக்கூடாது என்பான்.
உடல்களை எரிக்கவேண்டிய உறவினன் ஒருவன் அவற்றை எடுத்துச் செல்வதற்கு வந்து, அங்கு மறைந்திருக்கிற எவனையாவது பார்த்து, “இன்னும் உன்னுடன் வேறு யாராவது இருக்கிறார்களா?” எனக் கேட்கும்போது அவன், “இல்லை” என்பான். மேலும் அவன், “சத்தமிடாதே! நாம் யெகோவாவின் பெயரை வாயால் உச்சரிக்கக் கூடாது” என்பான்.
11 ௧௧ இதோ, யெகோவா கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை விரிசல்கள் உண்டாகவும் அடிப்பார்.
ஏனென்றால், யெகோவா கட்டளையிட்டிருக்கிறார். அவர் பெரிய வீட்டைத் துண்டுகளாகவும் சிறிய வீட்டைத் துகள்களாவும் நொறுக்குவார்.
12 ௧௨ கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை விஷமாகவும், நீதியின் கனியைக் கசப்பாகவும் மாற்றினீர்கள்.
செங்குத்தான பாறைகளில் குதிரைகள் ஓடுமோ? அங்கே எருதுகளால் ஒருவன் உழுவானோ? ஆயினும் நீங்களோ நீதியை நஞ்சாகவும், நீதியின் பலனைக் கசப்பாகவும் மாற்றினீர்கள்.
13 ௧௩ நாங்கள் எங்களுடைய லோதேபார் பட்டணத்தினாலே எங்களுக்குக் கர்னாயிம் பட்டணத்தை உண்டாக்கிக் கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள்.
லோதேபார் என்ற இடத்தைக் கைப்பற்றி மகிழ்கிறவர்களே, “எங்கள் சொந்த வலிமையினாலே கர்னாயீமை பிடித்தோம்” என்று சொல்கிறவர்களே, நீங்களே இப்படிச் செய்தீர்கள்?
14 ௧௪ இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, நான் ஒரு தேசத்தை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன்; அவர்கள் ஆமாத்துக்குள் நுழைகிற வழி தொடங்கிச் சமமான நாட்டின் ஆறுவரைக்கும் உங்களை ஒடுக்குவார்கள் என்று சேனைகளின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்.
ஆனால் சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது, “இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்களை எதிர்க்க ஒரு நாட்டைத் தூண்டிவிடுவேன். அவர்கள் ஆமாத்தின் நுழைவாசல்முதல், அரபா பள்ளத்தாக்குவரை உங்களை ஒடுக்குவார்கள்” என்கிறார்.

< ஆமோஸ் 6 >