< 2 இராஜாக்கள் 16 >

1 ரெமலியாவின் மகனாகிய பெக்காவின் பதினேழாம் வருட ஆட்சியில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் மகன் ஆகாஸ் ராஜாவானான். 2 ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருடங்கள் ஆட்சிசெய்தான்; அவன் தன் முற்பிதாவாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல், 3 இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே தன் மகன் முதற்கொண்டு அக்கினியில் சுட்டெரித்துப்போட்டான். 4 மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின் கீழும் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தான். 5 அப்பொழுது சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் மகன் பெக்காவும், எருசலேமின்மேல் போர்செய்யவந்து ஆகாசை முற்றுகையிட்டார்கள்; ஆனாலும் வெற்றிபெற முடியவில்லை. 6 அக்காலத்திலே சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு. யூதர்களை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர்கள் ஏலாத்திற்கு வந்து இந்நாள்வரைக்கும் அவ்விடத்திலே குடியிருக்கிறார்கள். 7 ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பி: நான் உம்முடைய அடியானும் உம்முடைய மகனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாக எழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னைத் தப்புவியும் என்று சொல்லச் சொல்லி; 8 யெகோவாவுடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷங்களிலும் கிடைத்த வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவிற்குக் காணிக்கையாக அனுப்பினான். 9 அசீரியா ராஜா அவனுக்குச் செவிகொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிமக்களைக் கீர் என்னும் பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான். 10 ௧0 அப்பொழுது ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலுள்ள அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசருக்கு எதிர்கொண்டுபோய்த் தமஸ்குவிலுள்ள பலிபீடத்தைக் கண்டான். ராஜாவாகிய ஆகாஸ் அந்தப் பலிபீடத்தின் தோற்றத்தையும், அதினுடைய சகல வேலைப்பாடாகிய அதின் மாதிரியையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினான். 11 ௧௧ ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருகிறதற்குள் ஆசாரியனாகிய உரியா அதைப்போலவே ஒரு பலிபீடத்தைக் கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான். 12 ௧௨ ராஜா தமஸ்குவிலிருந்து வந்தபோது, அவன் அந்தப் பலிபீடத்தைப் பார்த்து, அந்தப் பலிபீடத்திற்கு அருகில் வந்து, அதின்மேல் பலியிட்டு, 13 ௧௩ தன் சர்வாங்க தகனபலியையும் தன் போஜனபலியையும் தகனித்து, தன் பானபலியை ஊற்றி, தன் சமாதானபலிகளின் இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான். 14 ௧௪ யெகோவாவின் சந்நிதியிலிருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் யெகோவாவின் ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முன்புறத்திலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாக வைத்தான். 15 ௧௫ ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலை சர்வாங்க தகனபலியையும், மாலை போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல மக்களுடைய சர்வாங்க தகனபலி, போஜனபலி, பானபலி ஆகியவற்றைச் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் உதவி கேட்கிறதற்கு உதவும் என்றான். 16 ௧௬ ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான். 17 ௧௭ பின்னும் ராஜாவாகிய ஆகாஸ் ஆதாரங்களின் பலகைகளை அகற்றிவிட்டு, அவைகளின் மேலிருந்த கொப்பரைகளை எடுத்து, கடல்தொட்டியைக் கீழே நிற்கிற வெண்கல காளைகளின்மேலிருந்து இறக்கி, அதைக் கற்களின் தளவரிசையிலே வைத்து, 18 ௧௮ ஆலயத்தின் அருகே கட்டப்பட்டிருந்த ஓய்வுநாளின் மண்டபத்தையும், ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும், அசீரியாவின் ராஜாவினிமித்தம் யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான். 19 ௧௯ ஆகாஸ் செய்த மற்ற செயல்பாடுகள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 20 ௨0 ஆகாஸ் இறந்தபின், அவன் தாவீதின் நகரத்தில் தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அவன் மகனாகிய எசேக்கியா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

< 2 இராஜாக்கள் 16 >