< 1 சாமுவேல் 27 >

1 பின்பு தாவீது: நான் எந்த நாளிலாவது ஒரு நாள் சவுலின் கையினால் அழிந்து போவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை இல்லாமல்போகும்படியும், நான் அவனுடைய கைக்கு நீங்கியிருக்கும்படியும், நான் பெலிஸ்தர்களின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதை விட நலமான காரியம் வேறில்லை என்று தன்னுடைய இருதயத்தில் யோசித்தான்.
அதன்பின் தாவீது, “நான் சவுலின் கையினால் எந்த நாளிலாகிலும் ஒரு நாள் அழிக்கப்படுவேன். எனவே பெலிஸ்தியரின் நாட்டுக்குத் தப்பி ஓடிப்போவது தான் நான் செய்யக்கூடிய புத்தியான செயல். அப்பொழுது சவுல் இஸ்ரயேலில் எங்கேயும் என்னைத் தேடுவதைக் கைவிடுவான். நான் அவனுடைய கையிலிருந்து தப்பிவிடலாம்” என நினைத்தான்.
2 ஆகையால் தாவீது தன்னோடு இருந்த 600 பேரோடு எழுந்து, மாயோகின் மகனான ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்.
எனவே தாவீதும் அவனுடன் இருந்த அறுநூறு மனிதரும் காத் அரசனான மாயோகின் மகன் ஆகீஸிடம் போனார்கள்.
3 அங்கே தாவீதும், அவனுடைய மனிதர்களும், அவரவர் வீட்டாரும், தாவீதோடு அவனுடைய இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், நாபாலின் மனைவியாக இருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலும், காத் பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள்.
தாவீதும் அவன் மனிதரும் ஆகீஸுடன் காத் பட்டணத்தில் தங்கியிருந்தார்கள். ஒவ்வொருவனும் தன்தன் குடும்பத்துடன் இருந்தான். தாவீது தன் இரு மனைவிகளான யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமுடனும், கர்மேல் ஊராளான நாபாலின் விதவையான அபிகாயிலுடனும் இருந்தான்.
4 தாவீது காத் பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை.
தாவீது காத் ஊருக்குப் போனதைக் கேள்விப்பட்டவுடன் சவுல் அவனைத் தேடுவதை நிறுத்தினான்.
5 தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமானால், நான் தங்கும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடம் தாரும்; உம்முடைய அடியான் உம்மோடு இராஜரீக பட்டணத்திலே ஏன் தங்கவேண்டும் என்றான்.
அப்பொழுது தாவீது ஆகீஸிடம், “என்னிடம் உமக்குத் தயவு இருந்தால் நான் வாழ்வதற்கு உம்முடைய நாட்டுப்புறப் பட்டணங்களில் ஒன்றை ஒதுக்கித் தாரும். உமது அடியானாகிய நான் உமது அரசருக்குரிய நகரத்தில் உம்முடன் ஏன் வாழவேண்டும்” என்றான்.
6 அப்பொழுது ஆகீஸ்: அன்றையதினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்த நாள் வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது.
அன்றையதினம் ஆகீஸ் சிக்லாக் என்னுமிடத்தை அவனுக்குக் கொடுத்தான். அதனால் சிக்லாக் அன்றிலிருந்து யூதாவின் அரசர்களுக்கு சொந்தமாயிற்று.
7 தாவீது பெலிஸ்தர்களின் நாட்டிலே ஒரு வருடமும் நான்கு மாதங்களும் குடியிருந்தான்.
இவ்விதமாகத் தாவீது பெலிஸ்தியரின் பிரதேசத்தில் ஒரு வருடமும், நாலு மாதங்களும் தங்கியிருந்தான்.
8 அங்கேயிருந்து தாவீதும் அவனுடைய மனிதர்களும் கெசூரியர்கள் மேலும் கெஸ்ரியர்கள்மேலும் அமலேக்கியர்கள்மேலும் படையெடுத்துப் போனார்கள்; சூருக்குப் போகிற எல்லை தொடங்கி எகிப்து தேசம் வரை இருக்கிற நாட்டிலே பூர்வகாலம் தொடங்கி குடியிருந்தவர்கள் இவர்களே.
அப்பொழுது தாவீதும், அவன் மனிதரும் கேசூரியர், கெஸ்ரியர், அமலேக்கியர் என்பவர்களைச் சூறையாடினார்கள். இவர்கள் பண்டையக் காலத்திலிருந்து, சூர் தொடங்கி எகிப்துவரைக்கும் பரந்து கிடந்த இந்நாட்டில் வாழ்ந்தவர்கள்.
9 தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, ஆண்களையும் பெண்களையும் உயிரோடே வைக்காமல், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் உடைகளையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பி வருவான்.
தாவீது ஒரு பகுதியை தாக்கும் போதெல்லாம் ஒரு ஆணையோ, பெண்ணையோ உயிரோடே விடவில்லை. அவர்களுடைய செம்மறியாடுகள், மாடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், உடைகள் அனைத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு ஆகீஸிடம் திரும்பிப் போவான்.
10 ௧0 இன்று எந்த திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தெற்கு திசையிலும், யெராமியேலர்களுடைய தெற்கு திசையிலும் கேனியருடைய தெற்கு திசையிலும் என்பான்.
அப்பொழுது ஆகீஸ் அவனிடம், “இன்று எங்கே சென்று கொள்ளையடித்தீர்கள்” என்று கேட்பான். அதற்குத் தாவீது, “யூதாவின் நெகேவுக்கு எதிராகவும்” அல்லது, “யெரோமியேல் நெகேவுக்கு எதிராகவும்” அல்லது, “கேனியர் நெகேவுக்கு எதிராகவும்” என்று சொல்வான்.
11 ௧௧ இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கும்படி ஒருவரையும் தாவீது காத் பட்டணத்திற்குக் கொண்டுவராதபடி, ஒரு ஆணையாவது பெண்ணையாவது உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தர்களின் நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இப்படியே செய்துகொண்டுவந்தான்.
தாவீது ஒரு ஆணையோ, பெண்ணையோ உயிருடன் காத்திற்கு கொண்டுவரவில்லை. ஏனெனில் அவர்கள் தங்களைப் பற்றி ஆகீஸிற்குத் தகவல் கொடுத்து, “இதுவே தாவீது செய்தது” என்று சொல்வார்கள் என நினைத்தான். அவன் பெலிஸ்தியரின் பிரதேசத்தில் வாழ்ந்த காலம் முழுவதும் இவ்வாறாகவே செய்தான்.
12 ௧௨ ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய மக்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றென்றும் அவன் என்னுடைய ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.
ஆகீஸ் தாவீதை நம்பினான். எனவே, “தாவீது தன் சொந்த மக்களான இஸ்ரயேலருக்கு வெறுப்புக்குரியவனாகி விட்டான். இதனால் இவன் என்றென்றும் என் பணியாளனாய் இருப்பான்” என தனக்குள் சொல்லிக்கொண்டான்.

< 1 சாமுவேல் 27 >