< சங்கீதம் 89 >
1 எஸ்ராகியனாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் சங்கீதம். யெகோவாவின் உடன்படிக்கையின் அன்பை நான் என்றென்றும் பாடுவேன்; எல்லாத் தலைமுறைகளுக்கும் உமது சத்தியத்தை என் வாயினால் தெரியப்படுத்துவேன்.
2 உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றைக்கும் உறுதியாய் நிலைக்கிறது என்று அறிவிப்பேன்; நீர் உமது சத்தியத்தை வானத்தில் நிறுவினீர் என்பதையும் நான் அறிவிப்பேன்.
3 “நான் தெரிந்துகொண்டவனோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறேன்; என் அடியவனாகிய தாவீதுக்கு ஆணையிட்டிருக்கிறேன்.
4 ‘உன் வம்சத்தை என்றென்றும் நிலைநிறுத்தி, எல்லாத் தலைமுறைகளிலும் உன் சிங்காசனத்தை உறுதிப்படுத்துவேன்’” என்று நீர் சொன்னீர்.
5 யெகோவாவே, வானங்கள் உமது அதிசயங்களைப் புகழ்கின்றன; அவை பரிசுத்தவான்களின் சபையிலே உமது சத்தியத்தைப் புகழ்கின்றன.
6 மேலே ஆகாயத்தில் உள்ளவர்களில் யெகோவாவுடன் ஒப்பிடத்தக்கவர் யார்? பரலோக தூதர்களின் மத்தியில் யெகோவாவைப் போன்றவர் யார்?
7 பரிசுத்தவான்களின் சபையில் இறைவனே மிகவும் பயத்திற்கு உரியவராயிருக்கிறார்; தம்மைச் சுற்றியுள்ள எல்லாரைப்பார்க்கிலும் அவரே பிரமிக்கத்தக்கவர்.
8 சர்வ வல்லமையுள்ள இறைவனாகிய யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? யெகோவாவே, நீர் வல்லவர்; உமது சத்தியம் உம்மைச் சூழ்ந்திருக்கிறது.
9 பொங்கியெழும் கடலின்மேல் நீர் ஆளுகை செய்கிறீர்; அதின் அலைகள் பயங்கரமாக எழும்பும்போது நீர் அவற்றை அமைதியாக்குகிறீர்.
10 நீர் ராகாபை அழிந்தவர்களில் ஒருவரைப்போல் நொறுக்கினீர்; உமது பலமுள்ள புயத்தினால் உமது பகைவரைச் சிதறடித்தீர்.
11 வானங்கள் உம்முடையவை, பூமியும் உம்முடையதே; உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் நீரே நிலைநிறுத்தினீர்.
12 வடக்கையும் தெற்கையும் நீர் ஏற்படுத்தினீர்; தாபோரும் எர்மோனும் உமது பெயரில் மகிழ்ந்து பாடுகின்றன.
13 உமது புயம் வலிமைமிக்கது; உமது கரம் பலமுள்ளது, உமது வலதுகரம் உயர்த்தப்பட்டுள்ளது.
14 நீதியும் நியாயமும் உமது சிங்காசனத்தின் அடித்தளம்; அன்பும் சத்தியமும் உமக்குமுன் செல்கின்றன.
15 யெகோவாவே உம்மை ஆர்ப்பரித்துத் துதிக்க அறிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்; அவர்கள் உமது பிரசன்னத்தின் வெளிச்சத்திலே நடப்பார்கள்.
16 அவர்கள் நாள்தோறும் உமது பெயரில் களிகூருகிறார்கள்; அவர்கள் உமது நீதியில் மேன்மை அடைவார்கள்.
17 நீரே அவர்களின் மகிமையும் பெலனுமாய் இருக்கிறீர்; நீர் உமது தயவினால் எங்கள் பலத்தை உயரப்பண்ணினீர்.
18 உண்மையாகவே எங்கள் கேடயம் யெகோவாவுக்குரியது; எங்கள் அரசர் இஸ்ரயேலின் பரிசுத்தருக்குரியவர்.
19 நீர் ஒருமுறை தரிசனத்தில், உமக்கு உண்மையான மக்களுடன் பேசிச் சொன்னதாவது: “நான் ஒரு வீரனைப் பலத்தால் நிறைத்தேன்; மக்கள் மத்தியிலிருந்து நான் ஓர் இளைஞனை உயர்த்தியிருக்கிறேன்.
20 நான் என் பணியாளனான தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 என் கரம் அவனைத் தாங்கும்; நிச்சயமாகவே என் புயம் அவனைப் பலப்படுத்தும்.
22 பகைவன் அவனைக் கீழ்ப்படுத்தமாட்டான்; கொடியவன் அவனை ஒடுக்கவுமாட்டான்.
23 நான் அவனுடைய எதிரிகளை அவனுக்கு முன்பாக நொறுக்குவேன், அவனுடைய விரோதிகளை அடித்து வீழ்த்துவேன்.
24 என் உடன்படிக்கையின் அன்பும் சத்தியமும் அவனோடிருக்கும்; என் பெயரால் அவன் பலம் உயரும்.
25 நான் அவனுடைய ஆளுகையை கடலுக்கு மேலாகவும், அவனுடைய ஆட்சியை ஆறுகளுக்கு மேலாகவும் பரப்புவேன்.
26 அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தகப்பன், என் இறைவன், என் இரட்சகராகிய கன்மலை’ என்று கூப்பிடுவான்.
27 நான் அவனை எனது முதற்பேறான மகனாகவும், பூமியின் அரசர்களிலெல்லாம் மிக உயர்ந்தவனாகவும் நியமிப்பேன்.
28 நான் எப்பொழுதும் அவனுக்கு என் உடன்படிக்கையின் அன்பை வழங்குவேன்; நான் அவனோடு செய்யும் உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
29 நான் அவனுடைய வம்சத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன்; அவனுடைய சிங்காசனத்தை வானங்கள் உள்ளமட்டும் நிலைப்படுத்துவேன்.
30 “அவனுடைய மகன்கள் என் சட்டத்தைக் கைவிட்டு, என் நியமங்களைப் பின்பற்றாது போனால்,
31 என் விதிமுறைகளை மீறி, எனது கட்டளைகளைக் கைக்கொள்ளத் தவறினால்,
32 நான் அவர்களுடைய பாவத்தைத் தடியினாலும், அவர்களுடைய அநியாயத்தை சவுக்கடியினாலும் தண்டிப்பேன்;
33 ஆனாலும் நான் என் உடன்படிக்கையின் அன்பை அவனைவிட்டு அகற்றமாட்டேன்; என் வாக்குறுதியை ஒருபோதும் மாற்றவுமாட்டேன்.
34 நான் என் உடன்படிக்கையை மீறமாட்டேன்; என் உதடுகள் சொன்னதை மாற்றவுமாட்டேன்.
35 ஒரேதரமாக நான் என் பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டிருக்கிறேன்; தாவீதுக்கு நான் பொய்சொல்லமாட்டேன்:
36 அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைக்கும், அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்;
37 அது ஆகாயத்தின் உண்மையான சாட்சியாக சந்திரனைப்போல என்றென்றைக்கும் நிலைநிறுத்தப்படும்.”
38 ஆனாலும், இப்பொழுது நீர் அவனைத் தள்ளி, அவனைப் புறக்கணித்து விட்டிருக்கிறீர்; நீர் அபிஷேகம் பண்ணியவன்மேல் கோபமாயிருக்கிறீர்.
39 உமது பணியாளனுடன் செய்த உடன்படிக்கையை கைவிட்டு, அவனுடைய கிரீடத்தைத் தூசியில் தள்ளி அவமானப்படுத்தினீர்.
40 நீர் அவனுடைய மதில்களைத் தகர்த்து, அவனுடைய அரண்களையெல்லாம் இடித்துத் தூளாக்கினீர்.
41 கடந்து செல்லும் அனைவருமே அவனைக் கொள்ளையிட்டார்கள்; அவன் தனது அயலவர்களின் இகழ்ச்சிக்குள்ளானான்.
42 நீர் அவனுடைய எதிரிகளின் வலதுகையை உயர்த்தினீர்; அவனுடைய பகைவர் அனைவரும் மகிழும்படி செய்தீர்.
43 நீர் அவனுடைய வாளின் முனையை மழுங்கப்பண்ணி, யுத்தத்தில் அவனுக்குத் துணைசெய்யாதிருந்தீர்.
44 நீர் அவனுடைய சிறப்புக்கு முடிவை ஏற்படுத்தி, அவனுடைய சிங்காசனத்தை தரையிலே தள்ளினீர்.
45 நீர் அவனுடைய வாலிப நாட்களை குறுகப்பண்ணி, அவனை வெட்கத்தின் உடையால் மூடினீர்.
46 யெகோவாவே, நீர் எவ்வளவு காலத்திற்கு மறைந்திருப்பீர்? நீர் என்றென்றுமாய் மறைந்திருப்பீரோ? எவ்வளவு காலத்திற்கு உமது கோபம் நெருப்பைப்போல் பற்றியெரியும்?
47 என் வாழ்வு எவ்வளவு துரிதமாய் முடிவடைகிறது என்பதை நினைத்துக்கொள்ளும்; பயனற்ற நோக்கத்திற்காகவா நீர் எல்லா மக்களையும் படைத்தீர்!
48 மரணத்தைக் காணாமல் யார் உயிரோடிருப்பான்? அல்லது யார் பாதாளத்தின் வல்லமையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வான்? (Sheol )
49 யெகோவாவே, நீர் உமது சத்தியத்தில் தாவீதுக்கு ஆணையிட்ட உமது முந்தைய உடன்படிக்கையின் அன்பு எங்கே?
50 யெகோவாவே, உமது அடியவன் எவ்வளவாய் ஏளனம் செய்யப்பட்டிருக்கிறேன் என்பதையும் எல்லா நாட்டு மக்களின் நிந்தைகளை நான் என் இருதயத்தில் எவ்வாறு சகிக்கிறேன் என்பதையும் நினைத்துக்கொள்ளும்.
51 யெகோவாவே, உமது பகைவர் ஏளனம் செய்த நிந்தனை வார்த்தைகளையும், நீர் அபிஷேகித்தவரின் ஒவ்வொரு காலடிகளையும் அவர்கள் ஏளனம் செய்ததையும் நினைத்துக்கொள்ளும்.
52 யெகோவாவுக்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக!