< யோனா 2 >

1 யோனா மீனுக்குள்ளே இருந்து தனது இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடினான். 2 அவன் சொன்னதாவது: “என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன், நீர் எனக்குப் பதிலளித்தீர்; பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன், நீர் எனது அழுகையைக் கேட்டீர். (Sheol h7585) 3 நீர் என்னை ஆழத்துக்குள் எறிந்தீர், நடுக்கடலின் ஆழத்தில் எறிந்தீர், நீர்ச்சுழிகள் என்னைச் சுற்றிலும் சுழன்றுபோயின; உமது அலைகளும், அலையின் நுரைகளும் என்மேல் புரண்டன. 4 ‘உமது முன்னிலையிலிருந்து நான் துரத்தப்பட்டேன். இருந்தாலும், நான் திரும்பவும் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப்பார்ப்பேன்’ என்றேன். 5 என்னை விழுங்கிய தண்ணீர் என்னைப் பயமுறுத்தியது, ஆழம் என்னை சூழ்ந்துகொண்டது; கடற்பாசிக்கொடிகள் என் கழுத்தைச் சுற்றிக்கொண்டன. 6 மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன், கீழேயுள்ள பூமி என்னை என்றென்றைக்குமாக அடைத்து வைத்தது. ஆனால் என் இறைவனாகிய யெகோவாவே, நீர் குழியிலிருந்து என் உயிரை மேலே கொண்டுவந்தீர். 7 “யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில் நான் உம்மையே நினைத்தேன், என் மன்றாட்டு மேலெழுந்து உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது. 8 “சிலர் ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்; அவர்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய கிருபையை இழந்துபோகிறார்கள். 9 ஆனால், நானோ துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன். நான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவேன். ‘இரட்சிப்பு யெகோவாவிடமிருந்தே வருகிறது’” என்றான். 10 யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவை கரையில் கக்கிவிட்டது.

< யோனா 2 >