< எரேமியா 30 >

1 யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை: 2 “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: ‘நான் உன்னோடு பேசிய எல்லா வார்த்தைகளையும் ஒரு புத்தகத்தில் எழுது. 3 நாட்கள் வருகிறது,’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘அப்பொழுது நான், இஸ்ரயேல் யூதா ஆகிய என் மக்களை அவர்களுடைய சிறையிருப்பிலிருந்து கொண்டுவருவேன். நான் அவர்கள் முற்பிதாக்களுக்கு உரிமையாக்கிக்கொள்ளும்படி கொடுத்த நாட்டில் அவர்களைத் திரும்பவும் குடியமர்த்துவேன்’ என்று யெகோவா சொல்கிறார்.” 4 இஸ்ரயேலையும், யூதாவையும் குறித்து யெகோவா கூறும் வார்த்தைகள் இவையே. 5 “யெகோவா சொல்வதாவது: “‘பயத்தின் அழுகுரல்கள் கேட்கின்றன; அது சமாதானத்தின் குரல் அல்ல, பயத்தின் குரல். 6 கேட்டுப் பாருங்கள்; ஒரு ஆண் பிள்ளைகளைப் பெறமுடியுமோ? அப்படியிருக்க ஒவ்வொரு பெலமுள்ள மனிதனும் பிரசவிக்கும் பெண்ணைப்போல், தன் கைகளை வயிற்றில் வைத்துக்கொண்டிருப்பதை நான் காண்பது ஏன்? ஒவ்வொருவரின் முகமும் வெளிறியிருப்பதையும் நான் காண்கிறேனே. 7 ஐயோ! அந்த நாள் எவ்வளவு பயங்கரமாயிருக்கும்? அதைப் போன்ற நாள் ஒருபோதும் இருந்ததில்லை. யாக்கோபுக்கு அது ஒரு கஷ்டமான காலமாயிருக்கும். ஆனாலும் அவன் அதிலிருந்து காப்பாற்றப்படுவான். 8 “‘அந்த நாளில்,’ என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறதாவது, ‘நான் அவர்களுடைய கழுத்திலிருந்து நுகத்தை முறிப்பேன். கட்டுகளை அறுப்பேன். பிறநாட்டினர் அவர்களை இனி அடிமையாக்கமாட்டார்கள். 9 ஆனால் அவர்களோ, தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்வார்கள். அவர்களுக்காக நான் எழுப்பப்போகிற அவர்களுடைய அரசனாகிய தாவீதுக்கும் பணிசெய்வார்கள். 10 “‘ஆகையால் என் அடியானாகிய யாக்கோபே, நீ பயப்படாதே, இஸ்ரயேலே, நீ திகையாதே’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘நிச்சயமாக நான் உன்னைத் தூரமான இடத்திலிருந்து காப்பாற்றுவேன். உன் சந்ததிகளை அவர்கள் நாடுகடத்தப்பட்ட நாட்டிலிருந்து காப்பாற்றுவேன். இஸ்ரயேலர் திரும்பிவந்து சமாதானத்தோடும், பாதுகாப்போடும் தங்கள் நாட்டில் இருப்பார்கள்; அவர்களை ஒருவரும் பயமுறுத்தமாட்டார்கள். 11 நான் உங்களோடு இருக்கிறேன்; உங்களைக் காப்பாற்றுவேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘எந்த நாடுகளின் மத்தியில் நான் உங்களைச் சிதறடித்தேனோ, அந்த நாடுகளை நான் முற்றிலும் அழித்தாலும், உங்களை முற்றிலும் அழிக்கமாட்டேன். உங்களை நான் தண்டித்துச் சீர்படுத்துவேன். உங்களைத் தண்டிக்காமல் விடமாட்டேன், ஆனாலும் நீதியாகவே தண்டிப்பேன்.’ 12 “யெகோவா கூறுவது இதுவே: “‘உங்கள் புண் ஆற்ற முடியாதது; உங்கள் காயமும் குணப்படுத்த முடியாதது. 13 உங்களுக்காக வழக்காட ஒருவருமில்லை; உங்கள் காயங்களுக்கு மருந்தில்லை. நீங்கள் குணமடைய மாட்டீர்கள். 14 உங்களுடைய கூட்டாளிகள் யாவரும் உங்களை மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு உங்களைப்பற்றிய எவ்வித அக்கறையும் இல்லை. ஒரு பகைவன் தாக்குவதைப்போல் நான் உங்களைத் தாக்கி கொடூரமானவன் உங்களைத் தண்டிப்பதுபோல் தண்டித்திருக்கிறேன். ஏனெனில் உங்கள் குற்றம் பெரியது; உங்கள் பாவங்களும் அநேகமானவை. 15 காயத்திற்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? தேற்றமுடியாத வேதனைக்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? உங்களுடைய பெரிய குற்றத்திற்காகவும், உங்கள் அநேக அக்கிரமங்களுக்காகவுமே இவற்றை நான் உங்களுக்குச் செய்திருக்கிறேன். 16 “‘ஆனால் வரப்போகும் அந்த நாளில் உங்களை விழுங்குகிற யாவரும் விழுங்கப்படுவார்கள்; உங்கள் பகைவர்கள் எல்லோரும் நாடுகடத்தப்படுவார்கள். உங்களைக் கொள்ளையிடுகிறவர்கள் கொள்ளையிடப்படுவார்கள்; உங்களைச் சூறையாடுபவர்கள் யாவரையும் நான் சூறையாடுவேன். 17 ஒதுக்கித் தள்ளப்பட்டவள் என்றும், ஒருவரும் கவனிக்காத சீயோன் என்றும் நீங்கள் அழைக்கப்படுவதனால், உங்களுக்கு நான் மீண்டும் சுகத்தைக் கொடுப்பேன். உங்கள் புண்களையும் சுகப்படுத்துவேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார். 18 “யெகோவா கூறுவது இதுவே: “‘நான் யாக்கோபின் கூடாரங்களின் செல்வச் செழிப்பைத் திரும்பவும் கொடுப்பேன். அவனுடைய குடியிருப்புகளின்மீது இரக்கம் காட்டுவேன்; பட்டணம் அதன் இடிபாடுகளின்மேல் திரும்பக் கட்டப்படும். அரண்மனை அதற்குரிய இடத்தில் இருக்கும். 19 அவைகளிலிருந்து நன்றிப் பாடல்களும், மகிழ்ச்சியின் சத்தமும் வரும். நான் அவர்களுடைய எண்ணிக்கையை பெருகப்பண்ணுவேன்; அவர்கள் குறைந்துபோவதில்லை. அவர்களுக்குக் கனத்தைக் கொண்டுவருவேன். அவர்கள் இகழப்படமாட்டார்கள். 20 அவர்களின் பிள்ளைகள் பழைய நாட்களில் இருந்ததுபோல் இருப்பார்கள். அவர்கள் சமுதாயம் எனக்கு முன்பாக நிலைநிறுத்தப்படும். அவர்களை ஒடுக்கிய யாவரையும் நான் தண்டிப்பேன். 21 அவர்களுடைய தலைவன் அவர்களில் ஒருவனாயிருப்பான். அவர்களை ஆள்பவன் அவர்களின் மத்தியிலிருந்து எழும்புவான். அவனை நானே என் அருகில் கொண்டுவருவேன். அவன் என்னைக் கிட்டிச் சேருவான். ஏனெனில் தானாகவே என் அருகில் வருவதற்குத் தன்னை அர்ப்பணிக்கக் கூடியவன் யார்?’ என்று யெகோவா அறிவிக்கிறார். 22 ‘எனவே நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள், நான் உங்கள் இறைவனாயிருப்பேன்.’” 23 பாருங்கள், யெகோவாவின் கோபம் புயல்காற்றைப்போல உக்கிரமாய் எழும்பும்; அது கொடியவர்களின் தலையின்மேல் சுழன்று அடிக்கும். 24 யெகோவா தமது இருதயத்திலுள்ள நோக்கத்தை முற்றிலும் நிறைவேற்றும்வரை அவருடைய கோபம் தணியாது. வரும் நாட்களில் நீ அதை விளங்கிக்கொள்வாய்.

< எரேமியா 30 >