< ஏசாயா 52 >

1 விழித்தெழு சீயோனே, விழித்தெழு, உன்னைப் பெலத்தினால் உடுத்திக்கொள்! எருசலேமே, பரிசுத்த நகரமே, உன்னுடைய மகத்துவத்தின் உடைகளை உடுத்திக்கொள். விருத்தசேதனம் செய்யாதவர்களும், அசுத்தரும் இனி உனக்குள் வரமாட்டார்கள். 2 எருசலேமே, உன்னிலிருக்கும் தூசியை உதறிப் போடு; நீ எழுந்து அரியணையில் அமர்ந்திரு. சிறைபட்ட சீயோன் மகளே, உன் கழுத்தில் இருக்கும் கட்டுகளைக் கழற்றி, உன்னை விடுவித்துக்கொள். 3 யெகோவா கூறுவது இதுவே: நீ பணம் எதுவும் பெறாமல் விற்கப்பட்டாயே, “நீ பணமின்றி மீட்கப்படுவாய்.” 4 ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: “ஆரம்பத்தில் எனது மக்கள் எகிப்திலே வாழ்வதற்காகப் போனார்கள்; பின்னர் அசீரியர் அவர்களை ஒடுக்கினார்கள். 5 “இப்பொழுதோ இங்கு எனக்கு என்ன இருக்கிறது?” என்று யெகோவா கேட்கிறார். “எனது மக்கள் காரணமில்லாமல் கொண்டுசெல்லப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அலறச் செய்கிறார்கள், எனது பெயரும் நாளெல்லாம் தொடர்ந்து தூஷிக்கப்படுகிறது” என்று யெகோவா அறிவிக்கிறார். 6 “ஆகையால், எனது மக்கள் எனது பெயரை அறிந்துகொள்வார்கள்; அந்த நாளிலே, அதை முன்னறிவித்தவர் நானே என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள். ஆம், அவர் நானே.” 7 நற்செய்தியைக் கொண்டுவருவோரின் பாதங்கள் மலைகளின்மீது எவ்வளவு அழகாக இருக்கின்றன! அவர்கள் சமாதானத்தைப் பிரசித்தப்படுத்தி, நல்ல செய்திகளைக் கொண்டுவருவார்கள். இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி, சீயோனிடம், “உங்கள் இறைவனே ஆளுகை செய்கிறார்” என்று சொல்வார்கள். 8 கேளுங்கள், உங்களுடைய காவலர் தங்கள் குரல்களை எழுப்புகிறார்கள்; அவர்கள் ஒன்றுசேர்ந்து ஆனந்த சத்தமிடுகிறார்கள். யெகோவா சீயோனுக்குத் திரும்பும்போது, அதை அவர்கள் தங்கள் சொந்தக் கண்களால் காண்பார்கள். 9 எருசலேமின் பாழிடங்களே, நீங்கள் ஒன்றுசேர்ந்து மகிழ்ச்சியின் கீதம் பாடுங்கள். ஏனெனில் யெகோவா தனது மக்களைத் தேற்றி, எருசலேமை மீட்டுக்கொண்டார். 10 யெகோவா எல்லா ஜனங்களின் பார்வையிலும் தம் பரிசுத்த கரத்தை நீட்டுவார். அப்பொழுது பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாம் நமது இறைவனின் இரட்சிப்பைக் காணுவார்கள். 11 புறப்படுங்கள், புறப்படுங்கள், அங்கிருந்து வெளியேறுங்கள்! அசுத்தமான எதையும் தொடாதேயுங்கள்! யெகோவாவின் பாத்திரங்களைச் சுமக்கும் நீங்கள் அங்கிருந்து வெளியேறி சுத்தமாயிருங்கள். 12 ஆனால், நீங்கள் அவசரமாய் வெளியேறப்போவதில்லை, தப்பியோடிப்போகிறவர்கள் போல ஓடிப்போவதில்லை. ஏனெனில், யெகோவா உங்கள்முன் செல்வார், இஸ்ரயேலின் இறைவனே உங்களுக்குப் பின்னால் காவலாகவும் இருப்பார். 13 பாருங்கள், என் ஊழியன் ஞானமாய் செயலாற்றுவார்; அவர் எழுப்பப்பட்டு, உயர்த்தப்பட்டு, அதிக மேன்மைப்படுத்தப்படுவார். 14 அவரைக்கண்டு பிரமிப்படைந்தவர்கள் அநேகர்; அவரது தோற்றம் மனிதர் போலன்றி உருக்குலைந்ததாய் இருந்தது; அவரது சாயலும் மனிதர் போலன்றி சிதைக்கப்பட்டிருந்தது. 15 அநேக நாடுகள் அவரைக்கண்டு திகைப்பார்கள்; அவரின் நிமித்தம் அரசர்களும் தங்கள் வாய்களை மூடிக்கொள்வார்கள். அவர்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பார்கள், அவர்கள் கேள்விப்படாததை அவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.

< ஏசாயா 52 >