< ஆதியாகமம் 39 >

1 யோசேப்பு எகிப்திற்குக் கொண்டுபோகப்பட்டிருந்தான். பார்வோனுடைய அதிகாரிகளில் ஒருவனும், காவல் அதிகாரியுமாகிய போத்திபார் என்னும் எகிப்தியன், யோசேப்பைக் கொண்டுசென்ற இஸ்மயேலரிடம் அவனை விலைக்கு வாங்கினான். 2 யெகோவா யோசேப்புடன் இருந்தார், அதனால் அவன் செய்த எல்லாவற்றிலும் வெற்றிபெற்றான்; அவன் எகிப்திய எஜமானுடைய வீட்டில் தங்கியிருந்தான். 3 யெகோவா அவனோடு இருக்கிறார் என்றும், அவன் செய்யும் எல்லாவற்றிலும் யெகோவா அவனுக்கு வெற்றியைக் கொடுக்கிறார் என்றும் அவன் எஜமான் கண்டான். 4 அப்போது யோசேப்புக்கு அவனுடைய எஜமானின் கண்களில் தயவு கிடைத்தால், அவன் அவனுடைய எஜமானின் தனிப்பட்ட உதவியாளன் ஆனான். போத்திபார் அவனைத் தன் வீட்டுக்குப் பொறுப்பாக வைத்து, தனக்குச் சொந்தமான எல்லாவற்றையும் அவன் பொறுப்பில் கொடுத்தான். 5 இவ்வாறாக அவனுடைய வீட்டுக்கும், அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றிற்கும் பொறுப்பாக யோசேப்பை அவன் நியமித்ததுமுதல், யோசேப்பின் நிமித்தம் அந்த எகிப்தியனின் வீட்டை யெகோவா ஆசீர்வதித்தார். போத்திபாருக்கு அவனுடைய வீட்டிலும், வயல்வெளியிலும் உள்ள எல்லாவற்றிலும் யெகோவாவினுடைய ஆசீர்வாதம் இருந்தது. 6 அதனால் அவன் தனக்குள்ள எல்லாவற்றையும் யோசேப்பிடம் ஒப்படைத்து, அவனை அதிகாரியாக நியமித்தான். போத்திபாரோ தான் உண்ணும் உணவைத் தவிர வேறெதிலும் கவனம் செலுத்தவில்லை. யோசேப்பு நல்ல உடற்கட்டும் அழகிய தோற்றமும் உடையவனாய் இருந்தான். 7 சிலநாள் சென்றபின் போத்திபாரின் மனைவி யோசேப்பின்மீது ஆசைகொண்டு, “என்னுடன் உறவுகொள்ள வா!” என அழைத்தாள். 8 அவனோ அதை மறுத்தான். அவன் அவளிடம், “என் எஜமான் தன் வீட்டிலுள்ள எதைக் குறித்தும் கவனிப்பதில்லை; தனக்குச் சொந்தமாயுள்ள அனைத்தையும் என்னுடைய பராமரிப்பில் ஒப்புவித்துள்ளார். 9 இந்த வீட்டில் என்னைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை. நீ அவருடைய மனைவி என்பதால் உன்னைத்தவிர, வேறொன்றையும் அவர் என்னிடமிருந்து விலக்கி வைக்கவில்லை. அப்படியிருக்க, இவ்வாறான கொடுமையான செயலைச் செய்து, இறைவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்ய என்னால் எப்படி முடியும்?” என்றான். 10 அவள் நாளுக்குநாள் யோசேப்பைக் கட்டாயப்படுத்திய போதிலும், அவளோடு படுக்கைக்குச் செல்லவோ, அவளோடு இருக்கவோ அவன் உடன்படவில்லை. 11 ஒரு நாள் யோசேப்பு தன் கடமைகளைச் செய்வதற்காக வீட்டுக்குள் போனான், வீட்டு வேலைக்காரர் யாரும் உள்ளே இருக்கவில்லை. 12 அப்பொழுது அவள் யோசேப்பின் மேலுடையைப் பிடித்துக்கொண்டு, “என்னுடன் படுக்கைக்கு வா” என்றாள். அவனோ தன் மேலுடையை அவள் கையிலேயே விட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டான். 13 அவன் தன்னுடைய மேலுடையைத் தன் கையிலே விட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, 14 தன் வீட்டு வேலைக்காரரைக் கூப்பிட்டு, “இதோ பாருங்கள், இந்த எபிரெயன் நம்மை அவமானப்படுத்தும்படி இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறான்! அவன் என்னுடன் உறவுகொள்ளும்படி உள்ளே வந்தான். நான் கூச்சலிட்டேன். 15 நான் உதவிகேட்டுக் கூச்சலிட்டதை அவன் கேட்டவுடன், தன் மேலுடையை இங்கே விட்டுவிட்டு வெளியே ஓடிவிட்டான்” என்றாள். 16 அவள் அவனுடைய எஜமான் வீட்டுக்கு வரும்வரை அந்த மேலுடையை தன்னருகிலேயே வைத்திருந்தாள். 17 அவன் வந்ததும் அவனிடம் இந்தக் கதையைச் சொன்னாள்: “நீர் நம்மிடம் கொண்டுவந்த அந்த எபிரெய அடிமை என்னை அவமானப்படுத்தும்படி இங்கு வந்தான். 18 நான் உதவிக்காகக் கூச்சலிட, உடனே அவன் தன் மேலுடையை என் அருகே விட்டுவிட்டு, வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டான்” என்றாள். 19 “இப்படித்தான் உம்முடைய அடிமை என்னை நடத்தினான்” என்று தன் மனைவி தனக்குச் சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டதும், அவனுடைய கோபம் பற்றி எரிந்தது. 20 யோசேப்பின் எஜமான் அவனைக் கைதுசெய்து, அரச கைதிகளை அடைத்துவைக்கும் சிறையில் போட்டான். யோசேப்பு சிறையில் இருக்கும்போதும், 21 யெகோவா யோசேப்போடே இருந்தார்; அவர் அவனுக்கு இரக்கங்காட்டி, சிறைச்சாலைத் தலைவனின் கண்களில் அவனுக்குத் தயவு கிடைக்கச்செய்தார். 22 அதனால் சிறைக்காவல் அதிகாரி யோசேப்பைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எல்லோருக்கும் அதிகாரியாக்கினான்; அங்கு செய்யப்படவேண்டிய எல்லாவற்றுக்கும் அவனையே பொறுப்பாகவும் வைத்தான். 23 யெகோவா யோசேப்போடு இருந்து, அவன் செய்த அனைத்திலும் வெற்றியைக் கொடுத்தார்; அதனால் சிறைச்சாலைத் தலைவன் யோசேப்பின் பொறுப்பிலிருந்த எதையும் மேற்பார்வை செய்யவில்லை.

< ஆதியாகமம் 39 >