< 1 யோவான் 5 >

1 இயேசுவே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற ஒவ்வொருவனும் இறைவனால் பிறந்திருக்கிறான். பிதாவில் அன்பாயிருக்கிற ஒவ்வொருவனும், பிதாவின் பிள்ளைகளிலும் அன்பாயிருக்கிறான். 2 நாம் இறைவனில் அன்பாயிருந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதினாலேயே இறைவனின் பிள்ளைகளில் நாம் அன்பாயிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்கிறோம். 3 இறைவனில் அன்பாயிருப்பது, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதே. அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வதற்கு பாரமானவையும் அல்ல. 4 ஏனெனில், இறைவனால் பிறந்த ஒவ்வொருவரும் கிறிஸ்துவை விசுவாசித்து, உலகத்தை மேற்கொள்கிறார்கள். நமது விசுவாசமே உலகத்தை மேற்கொண்ட வெற்றி. 5 யார் உலகத்தை மேற்கொள்கிறார்கள்? இயேசுவை இறைவனின் மகன் என்று விசுவாசிக்கிறவர்கள் மட்டுமே மேற்கொள்கிறார்கள். 6 இயேசுகிறிஸ்துவே தண்ணீரினாலும், இரத்தத்தினாலும், வந்தார். அவர் தண்ணீர் மூலமாக மட்டுமல்ல, தண்ணீனால் மாத்திரமல்ல, இரத்தத்தினாலும் வந்தார். இது சத்தியமென்று பரிசுத்த ஆவியானவரும் சாட்சி கொடுக்கிறார். ஏனெனில், ஆவியானவர் சத்தியமுள்ளவர். 7 ஆகவே, சாட்சி கொடுப்பவை மூன்று இருக்கின்றன: 8 ஆவியானவர், தண்ணீர், இரத்தம்; இந்த மூன்று சாட்சிகளும், ஒருமைப்பட்டிருக்கிறது. 9 நாம் மனிதனின் சாட்சியை ஏற்றுக்கொள்கிறோமே, அப்படியானால் இறைவனுடைய சாட்சி அதிலும் மேலானது அல்லவா! ஏனெனில், இதுவே இறைவன் தமது மகனைக்குறித்துக் கொடுத்த சாட்சியாய் இருக்கிறது. 10 இறைவனின் மகனாகிய கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிறவர்கள் யாரோ அவர்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறார்கள். இறைவனை விசுவாசிக்காதவர்கள் யாரோ அவர்கள் இறைவனை பொய்யராக்கியிருக்கிறார்கள். ஏனெனில், இறைவன் தமது மகனாகிய கிறிஸ்துவைக்குறித்துக் கொடுத்த சாட்சியை அவர்கள் நம்பவில்லை. 11 இறைவன் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுத்திருக்கிறார். இந்த வாழ்வு அவருடைய மகனில் இருக்கிறது என்பதே அந்தச் சாட்சி. (aiōnios g166) 12 இறைவனுடைய மகனை தன் உள்ளத்தில் உடையவர்கள் யாரோ அவர்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறார்கள். இறைவனுடைய மகனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நித்தியவாழ்வு இல்லாதவர்கள். 13 இறைவனின் மகனின் பெயரில் விசுவாசமாய் இருக்கிறவர்களே, நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன். (aiōnios g166) 14 ஆனால், இறைவனுக்கு முன்வருவதற்கு நமக்குள்ள மனவுறுதி இதுவே: அவருடைய சித்தத்திற்கு இணங்க நாம் அவரிடம் எதையாவது கேட்கும்போது, அவர் நமது மன்றாட்டைக் கேட்கிறார். 15 அவர் நமது மன்றாட்டைக் கேட்கிறார் என்று நாம் அறிந்திருந்தால், நாம் எதைக் கேட்டாலும் அதைப் பெற்றுக்கொண்டோம் என்ற நிச்சயம் நமக்கு உண்டு என்றும் அறிகிறோம். 16 தன் சகோதரன் அல்லது சகோதரி மரணத்திற்குள் நடத்தாத பாவம் செய்வதைக் கண்டால், அதைச் செய்கிறவர்களுக்காக மன்றாட வேண்டும். அப்பொழுது இறைவன், அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்வைக் கொடுப்பார். மரணத்திற்கு வழிநடத்தாத பாவம் செய்கிற ஒருவனைக் குறித்தே நான் இங்கு குறிப்பிடுகிறேன். மரணத்தை விளைவிக்கும் பாவமும் உண்டு. அப்படிப்பட்டவைகளுக்காக நீங்கள் மன்றாட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. 17 எல்லா அநீதியும் பாவமே. ஆனால் எல்லா பாவமும் மரணத்திற்கு வழிநடத்துவதில்லை. 18 இறைவனால் பிறந்த யாரும் தொடர்ந்து பாவம் செய்வதில்லையென்று நாம் அறிவோம்; ஏனெனில் இறைவனின் மகனான கிறிஸ்து, அப்படிப்பட்டவர்களைப் பாதுகாத்துக் கொள்கிறார். தீயவன் அப்படிப்பட்டவர்களைத் தொடவே முடியாது. 19 நாம் இறைவனுடைய பிள்ளைகள் என்றும், நம்மைச் சுற்றியிருக்கிற முழு உலகமும், தீயவனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றும் அறிந்திருக்கிறோம். 20 இறைவனின் மகன் வந்து, விளங்கிக்கொள்ளும் ஆற்றலை நமக்குக் கொடுத்திருக்கிறதினால், நாம் சத்திய இறைவனை அறிந்திருக்கிறோம் என்பதும், நமக்குத் தெரியும். நாம் சத்திய இறைவனில், அவருடைய மகனாகிய இயேசுகிறிஸ்துவில் இருக்கிறோம். இந்த கிறிஸ்துவே சத்திய இறைவனும், நித்திய வாழ்வுமாக இருக்கிறார். (aiōnios g166) 21 அன்பான பிள்ளைகளே, இறைவன் அல்லாதவைகளிலிருந்து உங்களை விலக்கிக் காத்துக்கொள்ளுங்கள்.

< 1 யோவான் 5 >