< அப்போஸ்தலர் 25 >

1 பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாட்களானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான். 2 அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதர்களில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாக முறையீடுசெய்து, 3 அவனை வழியிலே கொன்றுபோடும்படி சதித்திட்டம் கொண்டவர்களாக, தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமிற்கு அழைக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள். 4 அதற்கு பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலை செசரியாவிலே காவல் செய்யப்பட்டிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன். 5 ஆகவே, உங்களில் முடிந்தவர்கள் கூடவந்து, அந்த மனிதனிடத்தில் குற்றம் ஏதாவது இருந்தால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சுமத்தட்டும் என்றான். 6 அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாட்கள் தங்கியிருந்து, பின்பு செசரியாவிற்குப்போய், மறுநாளிலே நீதிமன்றத்தில் உட்கார்ந்து, பவுலை அழைத்துவரும்படி ஆணையிட்டான். 7 அவன் வந்தபோது, எருசலேமிலிருந்து வந்த யூதர்கள் அவனைச் சுற்றிநின்று, தங்களால் நிரூபிக்கக்கூடாத பல கடுமையான குற்றங்களை அவன்மேல் சுமத்தினார்கள். 8 அதற்கு அவன் பதிலாக: நான் யூதர்களுடைய வேதபிரமாணத்திற்கும், தேவாலயத்திற்கும், இராயருக்கும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லை என்று சொன்னான். 9 அப்பொழுது பெஸ்து யூதர்களுக்கு உதவிசெய்ய விரும்பி, பவுலைப் பார்த்து: நீ எருசலேமுக்குப்போய், அந்த இடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்கு முன்பாக நீதி விசாரிக்கப்பட உனக்குச் சம்மதமா? என்றான். 10 ௧0 அதற்குப் பவுல்: நான் இராயருடைய நீதிமன்றத்திற்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நீதி விசாரிக்கப்படவேண்டியவன்; யூதர்களுக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாக அறிந்திருக்கிறீர். 11 ௧௧ நான் அநியாயஞ்செய்து, மரணத்திற்கு ஏதுவாக ஏதாவது செய்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு முறையிடமாட்டேன். இவர்கள் என்மேல் சுமத்துகிற குற்றங்கள் முற்றிலும் பொய்யானதுமல்லாமல், அவர்களுக்குத் தயவுசெய்யும்படிக்கு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்படைக்கக்கூடாது என்று இராயருக்கு மேல்முறையீடு செய்கிறேன் என்றான். 12 ௧௨ அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரர்களுடனே ஆலோசித்து: நீ இராயருக்கு மேல்முறையீடு செய்தாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாய் என்று பதில் சொன்னான். 13 ௧௩ சிலநாட்கள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைப் பார்க்கும்படி செசரியாவிற்கு வந்தார்கள். 14 ௧௪ அவர்கள் அங்கே அநேகநாட்கள் தங்கியிருக்கும்போது, பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவிற்குத் தெரிவித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனிதன் இருக்கிறான். 15 ௧௫ நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதர்களுடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் முறையீடுசெய்து, அவனுக்கு எதிராகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். 16 ௧௬ அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சுமத்தப்பட்ட மனிதன் குற்றஞ்சுமத்தினவர்களுக்கு நேராகநின்று, சுமத்தின குற்றத்திற்குத் தனக்காக எதிர்வாதம் சொல்ல அவனுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னே, குற்றஞ்சுமத்தினவர்கள் சாதகமாக அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன். 17 ௧௭ ஆகவே, அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் சிறிதும் தாமதம் செய்யாமல், மறுநாள் நீதிமன்றத்தில் உட்கார்ந்து, அந்த மனிதனைக் கொண்டுவரும்படி ஆணையிட்டேன். 18 ௧௮ அப்பொழுது குற்றஞ்சுமத்தினவர்கள் வந்துநின்று, நான் எண்ணியிருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல், 19 ௧௯ தங்களுடைய மதத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில விவாதத்திற்குரிய காரியங்களை அவனுக்கு விரோதமாகச் சொன்னார்கள். 20 ௨0 இப்படிப்பட்ட விவாதத்திற்குரிய காரியங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப்போய், அங்கே இவைகளைக்குறித்து நீதி விசாரிக்கப்பட உனக்குச் சம்மதமா என்று கேட்டேன். 21 ௨௧ அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நீதி விசாரிக்கப்படும்படி நிறுத்தப்படவேண்டுமென்று முறையிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்பும்வரை காவல் செய்யும்படி ஆணையிட்டேன் என்றான். 22 ௨௨ அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: அந்த மனிதன் சொல்லுகிறதை நானும் கேட்க விருப்பமாக இருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான். 23 ௨௩ மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து படைத்தலைவர்களோடும் பட்டணத்து தலைவர்களோடும் நீதிமன்றத்தில் நுழைந்தார்கள். உடனே பெஸ்துவினுடைய ஆணையின்படி பவுல் அழைத்துவரப்பட்டான். 24 ௨௪ அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடுகூட இந்த இடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனிதனைக்குறித்து யூதமக்களெல்லோரும் எருசலேமிலும் இந்த இடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது சரியில்லை என்று சொல்லிச் சத்தமிட்டார்கள். 25 ௨௫ இவன் மரணத்திற்கு ஏதுவானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன் தானே இராயனுக்கு மேல்முறையீடு செய்ததினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானித்தேன். 26 ௨௬ இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு உறுதிசெய்யப்பட்ட காரியமொன்றும் எனக்கு புரியவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே, 27 ௨௭ இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதவேண்டிய செய்தி ஏதாவது எனக்கு புரியும் என்று, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாக அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.

< அப்போஸ்தலர் 25 >