< ரோமர் 4 >

1 நமது முற்பிதா ஆபிரகாமைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? இவ்விஷயத்தில் அவனுடைய அனுபவம் என்ன?
அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்?
2 உண்மையிலேயே ஆபிரகாம் தனது செயல்களின் பொருட்டு நீதிமான் ஆக்கப்பட்டிருந்தால், அவன் பெருமைபாராட்ட இடமுண்டு. ஆனால் இறைவனுக்கு முன்பாக அவன் பெருமைபாராட்ட இடமில்லை.
ஆபிரகாம் செயல்களினாலே நீதிமானாக்கப்பட்டான் என்றால் மேன்மைபாராட்ட அவனுக்குக் காரணம் உண்டு; ஆனால் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்டமுடியாது.
3 வேதவசனம் என்ன சொல்கிறது? “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தான். அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.”
வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறது.
4 வேலை செய்கிறவனுக்குக் கொடுக்கப்படுகிற கூலி ஒரு நன்கொடையாகக் கணக்கிடப்படுவதில்லை; அது அவனுக்குக் கொடுக்கப்படவேண்டிய கூலி.
வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும்.
5 ஆனால் ஒருவனுடைய செயல்கள் இல்லாமல், பாவிகளை நீதிமானாக்கும் இறைவனிடம் விசுவாசம் வைக்கிற மனிதனுக்கு, அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்படுகிறது.
ஒருவன் செயல்களைச் செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனாக இருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
6 இதே விஷயத்தைத் தாவீதும் கூறுகின்றான். செயல்கள் ஏதும் செய்யாமலே இறைவனால் நீதிமான் எனக் கணக்கிடப்படும் மனிதனின் ஆசீர்வாதத்தைக் குறித்து தாவீது சொல்லும்போது,
அந்தப்படி, செயல்கள் இல்லாமல் தேவனாலே நீதிமான் என்று எண்ணப்படுகிற மனிதனுடைய பாக்கியத்தைக் காண்பிப்பதற்காக:
7 “தங்கள் குற்றங்களுக்காக மன்னிப்புப் பெற்றவர்களாய், தங்கள் பாவங்கள் மூடப்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
8 ஒருவனுடைய பாவத்தை ஒருபோதும் கர்த்தர் கணக்கில் வைத்திராவிட்டால், அவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்கிறான்.
எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
9 இந்த ஆசீர்வாதம் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமா? இல்லையெனில் விருத்தசேதனம் பெறாதவர்களுக்கும் உரியதா? ஆபிரகாமின் விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது என்று நாம் சொல்கிறோம்.
இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ? “ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறோமே.
10 அவன் எந்த சூழ்நிலையில் இருந்தபோது இது அவனுக்குக் கணக்கிடப்பட்டது? அவன் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு நடந்ததா? அல்லது பெற்றுக்கொள்வதற்கு முன்பு நடந்ததா? விருத்தசேதனம் பெற்றுக்கொண்டதின் பின்பு அல்ல, அதற்குமுன்புதான் அது நடந்தது.
௧0அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோதா அல்லது விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதா? விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோது இல்லை, விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதே.
11 ஆபிரகாம் விருத்தசேதனம் பெறாமல் இருந்தபோதே, விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட நீதியின் சான்றாக, விருத்தசேதனத்தை ஒரு அடையாளமாகப் பின்பு பெற்றான். ஆகவே விருத்தசேதனம் பெறாதவர்களாயிருந்தும், விசுவாசிகளான எல்லோருக்கும் ஆபிரகாம் ஆவிக்குரிய தகப்பனாயிருக்கிறான். இதனால் அப்படியே அவர்களுடைய விசுவாசம் அவர்களுக்கும் நீதியாகக் கணக்கிடப்படுகிறது.
௧௧மேலும், விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனம் இல்லாதவர்களாக விசுவாசிக்கிற எல்லோருக்கும் நீதி எண்ணப்படுவதற்காக அவர்களுக்கு அவன் தகப்பனாக இருப்பதற்கும்,
12 விருத்தசேதனம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான். அவர்கள் விருத்தசேதனத்தைப் பெற்றுக்கொண்டபடியினால் அல்ல. ஆபிரகாம் தான் விருத்தசேதனம் பெற்றுக்கொள்ளும் முன்னதாக அப்படியே விசுவாசத்தின் அடிச்சுவட்டிலே நடந்தான். நம்முடைய தந்தையாகிய ஆபிரகாமுக்கு இருந்த விசுவாசத்தினால் வரும் அடிச்சுவட்டில் நடக்கிறவர்களுக்கும் அவன் தந்தையாய் இருக்கிறான்.
௧௨விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாக மட்டுமில்லை, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.
13 உலகத்தின் உரிமையாளனாயிருப்பான் என்ற வாக்குத்தத்தத்தை இறைவன் அவனுக்கும், அவன் சந்ததிகளுக்கும் கொடுத்தார். இந்த வாக்குத்தத்தம் மோசேயின் சட்டத்தினால் அல்ல, விசுவாசத்தினால் வரும் நீதியினால் கொடுக்கப்பட்டது.
௧௩அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.
14 ஏனெனில், மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்படிகிறவர்கள் அதற்கு உரிமையாளர்களானால் விசுவாசம் உபயோகமற்றதாகிறது. வாக்குத்தத்தமும் அர்த்தமற்றதாகிறது.
௧௪நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும், வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும்.
15 ஆனால் மோசேயின் சட்டம் இறைவனின் கோபத்தையே கொண்டுவருகிறது. ஆனால் மோசேயின் சட்டம் இல்லாத இடத்தில், மீறுதலும் இல்லை.
௧௫மேலும் நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணம் இல்லை என்றால் கீழ்ப்படியாமையும் இல்லை.
16 ஆதலால் வாக்குத்தத்தம் விசுவாசத்தினால் வருகிறது. இதனால் இந்த வாக்குத்தத்தம் இலவசமான கிருபையினால், ஆபிரகாமின் சந்ததிகள் அனைவருக்கும் கொடுக்கப்படும் என்ற உறுதியையும் காட்டுகிறது. மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல, ஆபிரகாமின் விசுவாசம் விசுவாசிக்கிறவர்களுக்கும் அது கொடுக்கப்படுகிறது. ஆபிரகாம் நம் எல்லோருக்கும் தந்தையாயிருக்கிறார்.
௧௬எனவே, சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்குமட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது.
17 “அநேக நாடுகளுக்கு நான் உன்னைத் தந்தையாக்கினேன்” என்று எழுதப்பட்டிருக்கிற வேதவசனத்தின்படியே ஆபிரகாம் தான் விசுவாசித்த இறைவனின் பார்வையில், நம்முடைய தந்தையாய் இருக்கிறான். இறைவனே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறவர்; முன்பில்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிறார் என்று ஆபிரகாம் விசுவாசித்தான்.
௧௭“அநேக தேசமக்களுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்” என்று எழுதியிருக்கிறபடி, அவன், தான் விசுவாசித்தவருமாக, மரித்தோரை உயிரோடு எழுப்பி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாக இருக்கிற தேவனுக்குமுன்பாக நம்மெல்லோருக்கும் தகப்பன் ஆனான்.
18 “உனது சந்ததிகள் வானத்து நட்சத்திரங்களைப்போல் அதிகமாயிருக்கும்” என்று இறைவன் ஆபிரகாமுக்குக் கூறியபோது யாரும் நம்புகிறதற்கு கூடாதிருந்தும் ஆபிரகாம் எதிர்பார்ப்புடன் விசுவாசித்தான். அதனால் ஆபிரகாம் அநேக நாடுகளுக்கு தந்தையானான்.
௧௮“உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே,” தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான்.
19 அவன் ஏறத்தாழ நூறு வயதுள்ளவனாயிருந்தான். இதனால் அவனுடைய உடல் சக்தியற்றுப் போயிருந்தது. சாராளுடைய கருப்பையும் கருத்தரிக்கும் சக்தியை இழந்திருந்தது. இதை அவன் நன்றாய் அறிந்திருந்தும், அவனுடைய விசுவாசம் தளரவில்லை.
௧௯அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான்.
20 இறைவனுடைய வாக்குறுதியைக்குறித்து அவிசுவாசத்தினால் அவன் தடுமாற்றம் அடையவில்லை. ஆனால் அவன் தனது விசுவாசத்தில் வலிமை அடைந்து, இறைவனுக்கே மகிமையைச் செலுத்தினான்.
௨0தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல்,
21 தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இறைவனுக்கு வல்லமை உண்டு என்பதை அவன் முழு நிச்சயமாய் நம்பினான்.
௨௧தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவன் ஆனான்.
22 இதனால்தான், “அவனுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.
௨௨எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
23 அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பது அவனுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
௨௩“அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,” என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பிய இறைவன்மேல் விசுவாசம் வைக்கும் நமக்கும் நம்முடைய விசுவாசத்தை நீதியாகக் கணக்கிடுவார் என்றே அது எழுதப்பட்டுள்ளது.
௨௪நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
25 இறைவன் இயேசுவை நம்முடைய பாவங்களுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, நம்மை நீதிமான்கள் ஆக்குவதற்காக உயிரோடு எழுப்பினார்.
௨௫அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

< ரோமர் 4 >