< யோபு 22 >

1 அதற்கு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது: 2 “மனிதனால் இறைவனுக்குப் பயன் ஏதும் உண்டோ? ஞானவானாலும் அவருக்கு பயன் உண்டோ? 3 நீ நீதிமானாய் இருந்திருந்தாலும், எல்லாம் வல்லவருக்கு அது மகிழ்ச்சி அளிக்குமோ? உன் வழிகள் குற்றமற்றவையாய் இருந்தாலும் அதினால் அவருக்கு இலாபம் என்ன? 4 “அவர் உன்னைக் கடிந்துகொண்டு, உனக்கு எதிராகக் குற்றம் சாட்டுவது உன் பக்தியின் காரணமாகவோ? 5 உன் கொடுமை பெரிதானதல்லவோ? உன் பாவங்கள் முடிவில்லாதவை அல்லவோ? 6 நீ காரணமின்றி உனது சகோதரரின் அடகுப்பொருளை வற்புறுத்திக் கேட்டு, ஏழைகளின் உடைகளைப் பறித்துக்கொண்டாய். 7 நீ களைத்தவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை; பசித்தவனுக்கும் உணவு கொடுக்காமல் போனாய். 8 நீ நிலத்திற்கு உரிமையாளன். மதிப்புக்குரியவனாய் வாழ்ந்திருந்தபோதும் இப்படி செய்தாய். 9 நீ விதவைகளை வெறுங்கையுடன் அனுப்பினாய்; அனாதைப் பிள்ளைகளின் பெலனை ஒடித்தாய். 10 அதினால்தான் கண்ணிகள் உன்னைச் சுற்றிலுமிருக்கின்றன; திடீரென வரும் துன்பம் உன்னைத் திகிலூட்டுகிறது. 11 அதினால்தான் நீ பார்க்க முடியாத அளவு இருளாகவும் இருக்கிறது; வெள்ளமும் உன்னை மூடுகிறது. 12 “வானத்தின் உன்னதங்களில் அல்லவோ இறைவன் இருக்கிறார்? மேலேயுள்ள நட்சத்திரங்களைப் பார்; அவை எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன. 13 அப்படியிருந்தும் நீ, ‘இறைவனுக்கு என்ன தெரியும்? இப்படிப்பட்ட இருளின்வழியே அவர் நியாயந்தீர்க்கிறாரோ? 14 வானமண்டலங்களில் அவர் உலாவுகையில் அடர்ந்த மேகங்கள் அவரை மூடுகின்றன; அதினால் அவர் எங்களைக் காண்கிறதில்லை’ என்கிறாய். 15 தீய மனிதர் சென்ற பழைய பாதையில் நீயும் நடப்பாயோ? 16 அவர்கள் தங்கள் காலம் வருமுன்பே இறந்துபோனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது. 17 அவர்கள் இறைவனிடம், ‘நீர் எங்களை விட்டுவிடும்! எல்லாம் வல்லவரால் எங்களுக்கு என்ன ஆகும்?’ என்றார்கள். 18 இருப்பினும், அவர் அவர்களை நன்மைகளால் நிரப்பினார்; நான் கொடியவரின் ஆலோசனைக்கு விலகி நிற்கிறேன். 19 அவர்களின் அழிவைக் கண்டு நேர்மையானவர்கள் மகிழ்கிறார்கள்; குற்றமற்றவர்கள் அவர்களைக் கேலிபண்ணி, 20 ‘பகைவர்கள் அழிய, நெருப்பு செல்வத்தைச் சுட்டது’ என்கிறார்கள். 21 “இறைவனுக்குப் பணிந்து அவருடன் சமாதானமாயிரு; உனக்குச் செழிப்பு உண்டாகும். 22 அவர் வாயிலிருந்து வரும் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள். அவருடைய வார்த்தைகளை உன் இருதயத்தில் பதித்துக்கொள். 23 நீ கொடுமையை உன் கூடாரத்தைவிட்டு அகற்றி, எல்லாம் வல்லவரிடத்தில் திரும்பினால், உன் பழைய நிலைமையை அடைவாய். 24 நீ தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் எண்ணிக்கொள். 25 அப்பொழுது எல்லாம் வல்லவரே உனது தங்கமாகவும், உனக்குரிய சிறந்த வெள்ளியாகவும் இருப்பார். 26 அப்பொழுது, நீ நிச்சயமாய் எல்லாம் வல்லவரில் மகிழ்ச்சிகொண்டு, இறைவனை நோக்கி உன் முகத்தை உயர்த்துவாய். 27 நீ அவரிடம் வேண்டுதல் செய்யும்போது, அவர் உனக்குச் செவிகொடுப்பார்; நீ பொருத்தனைகளையும் நிறைவேற்றுவாய். 28 நீ தீர்மானிப்பது செய்யப்படும், உன் வழிகளிலும் ஒளி பிரகாசிக்கும். 29 மனிதர் தாழ்த்தப்படும்போது நீ அவரிடம், ‘அவர்களை உயர்த்தும்’ என்று சொன்னால், அவர் தாழ்ந்தோரைக் காப்பாற்றுவார். 30 அவர் குற்றமுள்ளவனையும்கூட விடுவிப்பார்; உன் கைகளின் தூய்மையின் நிமித்தம் அவன் விடுவிக்கப்படுவான்.”

< யோபு 22 >