< பிரசங்கி 7 >

1 சிறந்த வாசனைத் தைலத்தைவிட நற்பெயரே நல்லது, பிறக்கும் நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது. 2 விருந்து வீட்டிற்குப் போவதைப் பார்க்கிலும், துக்க வீட்டிற்குப் போவதே சிறந்தது. ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் நியதியும் மரணமே; உயிரோடிருக்கிறவர்கள் இதைக் மனதிற்கொள்ளவேண்டும். 3 சிரிப்பைப் பார்க்கிலும் துக்கமே நல்லது; ஏனெனில் துக்கமுகம் இருதயத்திற்கு நன்மையைக் கொடுக்கும். 4 ஞானமுள்ளவர்களின் இருதயம் துக்க வீட்டிலேயே இருக்கிறது; ஆனால் மூடர்களின் இருதயமோ களிப்பு வீட்டிலேயே இருக்கிறது. 5 மூடர்களின் பாடலைக் கேட்பதைப் பார்க்கிலும், ஞானமுள்ளவர்களின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நல்லது. 6 பானைக்குக்கீழ் சடசட என எரியும் முட்களின் சத்தத்தைப்போலவே, மூடர்களின் சிரிப்பும் இருக்கும். இதுவும் அர்த்தமற்றதே. 7 பலவந்தமாய் எடுத்த ஆதாயம், ஒரு ஞானியையும் மூடனாக்கும். இலஞ்சம் வாங்குதல் இருதயத்தைக் கறைப்படுத்தும். 8 ஒரு காரியத்தின் தொடக்கத்தைப் பார்க்கிலும், அதின் முடிவு நல்லது; பெருமையைப் பார்க்கிலும் பொறுமையே சிறந்தது. 9 உள்ளத்தில் கோபத்திற்கு இடங்கொடாதே, ஏனெனில் கோபம் மூடர்களின் மடியிலே குடியிருக்கும். 10 “இந்த நாட்களைவிட முந்திய நாட்கள் நலமாய் இருந்தது ஏன்?” என்று கேட்காதே. இப்படியான கேள்விகளைக் கேட்பது ஞானமுள்ள செயல் அல்ல. 11 உரிமைச்சொத்தைப்போல, ஞானம் இருப்பது நல்லது; உயிரோடிருக்கும் அனைவருக்கும் அதுவே நன்மை கொடுக்கிறது. 12 பணம் புகலிடமாய் இருப்பதுபோலவே, ஞானமும் ஒரு புகலிடம்; ஆனால் ஞானம் அதைக் கொண்டிருக்கிறவர்களின் உயிரைப் பாதுகாக்கிறது, இதுவே அறிவின் மேன்மை. 13 இறைவன் செய்திருப்பதைக் கவனித்துப் பாருங்கள்: அவர் கோணலாக்கினதை யாரால் நேராக்க முடியும்? 14 காலங்கள் நலமாயிருக்கும்போது, மகிழ்ச்சியாயிரு; காலங்கள் கஷ்டமாய் இருக்கும்போது, சிந்தனை செய்: இறைவனே இரண்டையும் ஏற்படுத்தியிருக்கிறார், ஆகையால் ஒரு மனிதனால் தனது எதிர்காலத்தைக் குறித்து எதையும் கண்டுபிடிக்க முடியாது. 15 நீதியானவன் தன் நீதியில் அழிந்துபோகிறதும்: கொடுமையானவன் தன் கொடுமையிலே நீடித்து வாழ்கிறதுமான இரண்டையும் அர்த்தமற்ற என் வாழ்வில் நான் கண்டேன். 16 ஆகையால் மிதமிஞ்சி நீதிமானாகவோ, மிதமிஞ்சிய ஞானமுள்ளவனாகவோ காட்டிக்கொள்ளாதே. அதினால் நீ ஏன் உன்னை அழித்துக்கொள்ள வேண்டும்? 17 அதிக கொடியவனாய் இராதே, முட்டாளாயும் இராதே. உன் காலத்திற்கு முன் நீ ஏன் சாகவேண்டும்? 18 முதலாவதைப் பற்றிக்கொள்வதும், இரண்டாவதைக் கைவிடாதிருப்பதும் நல்லது. இறைவனுக்குப் பயந்து நடக்கிறவனோ மிதமிஞ்சிய நடத்தைகளைக் கைக்கொள்ளமாட்டான். 19 பட்டணத்திலுள்ள பத்து ஆளுநர்களைப் பார்க்கிலும், ஒரு ஞானியை, ஞானம் அதிக வலிமையுள்ளவனாக்கும். 20 ஒருபோதும் பாவம் செய்யாமல், சரியானதையே செய்கிற, நீதியான மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை. 21 மனிதர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்தில் எடுக்காதே; கவனிப்பாயானால் உன் வேலைக்காரன் உன்னைச் சபிப்பதையும் நீ கேட்க நேரிடலாம். 22 ஏனெனில் பலமுறை, நீயும் மற்றவர்களைச் சபிக்கிறதை உன் இருதயத்தில் அறிவாயே. 23 இவை எல்லாவற்றையும் நான் என் ஞானத்தினால் சோதித்துப் பார்த்து, “நான் ஞானமுள்ளவனாய் இருக்க உறுதிகொண்டேன்” என்று சொன்னேன்; ஆனால் இதுவும் எனக்கு எட்டாததாய் இருந்தது. 24 ஞானம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அது மிக தூரமாகவும் ஆழமாகவும் இருக்கிறது. அதை யாரால் கண்டறிய முடியும்? 25 ஆகவே, ஞானத்தையும் நிகழ்வுகளுக்கான காரணகாரியத்தையும் அறியவும், விசாரிக்கவும், ஆராயவும் என் மனதைச் செலுத்தினேன். கொடுமையின் மூடத்தனத்தையும், மூடத்தனத்தின் அறிவீனத்தையும் விளங்கிக்கொள்ள என் மனதைத் திருப்பினேன். 26 கண்ணியாய் இருக்கும் பெண், மரணத்திலும் பார்க்க கசப்பானவள் என்று நான் கண்டேன்; அவளது இருதயம் பொறியாயும், அவளது கைகள் சங்கிலிகளாயும் இருக்கின்றன. இறைவனுக்குப் பிரியமாய் நடக்கும் மனிதனோ அவளிடமிருந்து தப்புவான். பாவியையோ அவள் சிக்க வைப்பாள். 27 “இதோ, நிகழ்வுகளின் திட்டங்களை விளங்கிக்கொள்வதற்காக ஒன்றுடன் ஒன்றைச்சேர்த்துப் பார்த்தேன்”: அப்பொழுது நான் கண்டது இதுவே என்று பிரசங்கி சொல்கிறான்: 28 “நான் ஆயிரம் பேருக்குள்ளே நேர்மையான ஒருவனை கண்டேன்; ஆனால் ஆயிரம் பெண்களுக்குள்ளே நேர்மையான ஒரு பெண்ணை நான் காணவில்லை. நான் இன்னும் ஆராய்ந்து கொண்டேயிருக்கிறேன்; ஆனால் விளங்கவில்லை.” 29 ஆனால் இது ஒன்றையே நான் கண்டுபிடித்தேன்: இறைவன் மனுக்குலத்தை நீதியானதாகவே படைத்தார்; மனிதர்களோ தங்கள் மனம்போன போக்கில் நடந்துகொள்கிறார்கள்.

< பிரசங்கி 7 >